அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் தேமுதிக மட்டுமே மிகக்குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக வடசென்னை, திருச்சியில் படுமோசமாக தோற்று விட்டது. 2016-ல் 2.39 சதவிகிதமாக இருந்த தேமுதிகவின் வாக்குவங்கி தற்போது 2.19 ஆக குறைந்துள்ளது.

கடந்த 2009 தேர்தலில் 10.3 சதவிகித வாக்குகளை பெற்றிருந்த தேமுதிக 10 ஆண்டுகளில் 2.39 சதவிகித வாக்குகளை பெற்று தேய்ந்துள்ளது. தேர்தலில் கிடைத்த படுதோல்வியை விட மேலும் ஒரு அதிர்ச்சி தேமுதிகவுக்கு காத்திருக்கிறது. அக்கட்சிக்கான மாநில கட்சி என்ற அங்கீகாரமும் பறிபோகும் நிலை உள்ளது. இதனால், அக்கட்சியால் முரசு சின்னத்தை பயன்படுத்த முடியாமல் போகலாம். தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் மட்டுமே அக்கட்சி போட்டியிட முடியும்.

மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள ஒரு கட்சி அந்த மாநிலத்தில் பதிவாகியிருக்கும் ஒட்டுமொத்த வாக்குகளில் குறைந்த பட்சம் 6 சதவிகித வாக்குகளை பெற வேண்டும். குறைந்தது ஒரு மக்களவை தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது 6 சதவிகித வாக்குகளையும் 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர் இடங்களில் 3 சதவிகித உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும்.

அல்லது தமிழக அளவில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருக்க வேண்டும். ஆனால், இது எதுவும் தற்போது மாநில கட்சியான தேமுதிகவிடம் இல்லை. தொடர்ந்து 3 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ள தேமுதிக, இனி மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

விஜயகாந்த் சுறுசுறுப்பாக இருந்த போது கணிசமாக உயர்ந்த வாக்குசதவிகிதம், பிரேமலதா தலைமையில் தொடர்ந்து குறைந்துகொண்டே போகிறது. கட்சியை பலப்படுத்தாமல் தேர்தலில் எப்படி வெற்றி கிடைக்கும்? எனக் கேள்வி எழுப்புகின்றனர் தொண்டர்கள்.