தே.மு.தி.க.வுக்கு தனி இணைய தளத்தை நேற்று விஜயகாந்த் துவக்கி வைத்தார். ஃபுல் மேக் அப்பில், ஒரு சேரில் கேப்டன் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே ஒரு ஆப்பிள் லேப்டாப் ஓப்பனாகி இருக்கிறது. அதை அவர் இயக்க, அருகிலேயே கேப்டனை விட தூக்கலான மேக் - அப்பில் கழக பொருளாளரான பிரேமலதா புன்னகையோடு நிற்கிறார். இவர்கள் தவிர பார்த்தசாரதி, சுதீஷ் உள்ளிட்ட கழகத்தின் மாநில நிர்வாகிகளும் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யாரு முகத்திலும் மகிழ்ச்சியோ, உற்சாகமோ இல்லை என்பதை கவனிக்க. 

என்ன திடீரென தே.மு.தி.க.வுக்கு தனி இணையதளமெல்லாம்? என்று விசாரித்தால், ‘பிரேமலதா பொறுப்பேற்ற பிறகு கட்சிக்குள் மளமள மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. காலத்துக்கு ஏற்ப ஹைடெக்காக அரசியல் செய்ய நினைக்கிறார் பொருளாளர்.’என்று பொத்தாம் பொதுவாக பதில் வருகிறது. ஆனால், உள்ளே இறங்கி விசாரிக்கையில் வேறு ஒரு கோணத்தில் சில தகவல்கள் வந்து விழுகின்றன. அதாவது தே.மு.தி.க. ஏற்கனவே சமூக வலைதளங்களில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கென தனி முகநூல் பக்கங்களும் இருக்கின்றன. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தே.மு.தி.க.வின் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றின் சார்பாக ஒரு சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதாவது ‘இவர்களிட்ல் அடுத்த முதல்வர் யார்?’ எனும் கேள்வியுடன் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், தமிழிசை, சீமான், தினகரன், விஜயகாந்த், கமல்ஹாசன், ரஜினி உள்ளிட்ட எட்டு பேரின் படங்களைப் போட்டு அந்த சர்வே கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இதில் மிக மிக அதிகமான வாக்குகள் தினகரனுக்குதான் விழுந்திருக்கின்றன. 

சர்வே நடு நிலையாக தோன்றிட வேண்டும் என்பதற்காக, விஜயகாந்தின் படத்தை ஏழாவதாகவும், தினகரன் படத்தை மூன்றாவதாகவும், ஸ்டாலினின் படத்தை முன் வரிசையிலும், கமல்ஹாசனை விஜயகாந்துக்கு முன்னதாகவுமெல்லாம் வைத்து இந்த சர்வேயை வடிவமைத்திருந்தனர் கேப்டன் கட்சியினர். ஆனால் ரிசல்டை பார்த்து அவர்களுக்கு வியர்த்து விறுவிறுத்துவிட்டது. மூன்றாவதாக நம்பர் இடப்பட்டிருந்த தினகரனை குறிக்கும் வகையில் ‘3’ என்பதையே பலர் பதிலாக குறிப்பிட்டிருந்திருக்கின்றனர். வேறு சிலரோ ‘அண்ணன் டி.வி.வி.தான் அடுத்த முதல்வர்டா! டி.டி.வி.யை விட்டா யாரு? முதல்வர் தினகரன்’ என்றெல்லாம் ஆரம்பித்து ஏகத்துக்கும் அவரை கொண்டாடியிருந்திருக்கின்றனர். 

தினகரனுக்கு அடுத்து ஸ்டாலினுக்கு அதிக வாக்குகளும், அதற்கடுத்து கமல்ஹாசனுக்கும் ஓட்டுக்கள் விழுந்திருக்கின்றன. சீமானை விட குறைவாக  விஜயகாந்துக்கு வாக்குகள் விழுந்ததோடு, தமிழிசையின் போட்டோ சர்வேயில் இருந்ததற்காக கேவலமாக அந்த சர்வே வடிவமைப்பாளர்களை திட்டியிருக்கின்றனர். ஒட்டு மொத்தமாக இந்த சர்வே முடிவானது தே.மு.தி.க.வை திகைக்க வைத்துவிட்டது. தங்கள் தலைவரின் நிலை இவ்வளவு இறக்கத்தில் கிடக்கும் என்பதை அவர்களால் நம்பவும் முடியவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை. 

சர்வேயை போஸ்ட் செய்வதற்கு முன் பெருமையாக விஜயகாந்திடம் சொல்லியிருந்ததால், இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர் சர்வே முடிவை துருவித் துருவி கேட்டிருக்கிறார். துவக்கத்தில் எஸ்கேப் ஆன நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் உண்மையை சொல்லிவிட்டு, சர்வே பக்கத்தை அவரிடம் காண்பித்திருக்கின்றனர். மனிதர் கொதித்து கண் சிவந்துவிட்டாராம். ‘அது எப்படிடா நாம நடத்துற சர்வேயில என் போட்டோவை ஏழாவதா போட்ட? மூணாவதா வெச்சிருந்தா தினகரனுக்கு விழுந்த ஓட்டு எனக்கு விழுந்திருக்குமில்லையா?’ என்று பொங்கிட, ‘தலைவரே அந்தாளை எந்த நம்பர்ல வெச்சிருந்தாலும் அவரோட ஆளுங்க தேடிப்பிடிச்சு அதையே செலக்ட் பண்ணுவானுங்க. நம்பர் பிரச்னையில்லை இங்கே!’ என்று விளக்கம் கொடுக்க, ஆத்திரத்தின் உச்சத்துக்கு போய்விட்டாராம் கேப்டன். 

பிறகு அவரிடம் “தினகரன் டீமோட வேலையே இதுதான். அவங்களாகவே சர்வே நடத்தி, அவங்க தலைவரை ப்ரமோட் பண்ணிக்கிறாங்க. இல்லேன்னா எந்த கட்சிக்காரங்க சர்வே நடத்தினாலும் மாஸா உள்ளே வந்து கலந்துகிட்டு தினகரனுக்கு ஓட்டு போடுறாங்க. இதை ஒரு பொழப்பாவே வெச்சிருக்காங்க. பல நூறு இளைஞர்களை இப்படி சர்வேவில் கலந்துக்க சொல்லி அதுக்கு சம்பளமும் கொடுக்குது தினகரன் தரப்பு. அதனால இந்த ஏமாத்து வேலைக்கு நீங்க முக்கியத்துவம் கொடுக்காதீங்க கேப்டன்.” என்று சமாதானம் செய்தார்களாம் நிர்வாகிகள். 

அதன் பிறகே அவரை கூல் செய்வதற்காகவும், கட்சியை ஹைடெக்காக பலப்படுத்தும் நோக்கிலும் புதிதாக இணையதளமொன்றை தயார் செய்து அதை கேப்டன் கையாலேயே துவக்க வைத்தார்களாம். ஆக இப்படியொரு டெரர் ஸ்டோரி இருப்பதால்தான் சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோரின் முகம் இருண்டு கிடந்தது! என்கிறார்கள். எது எப்படியோ கேப்டனின் சர்வே கோட்டைக்குள்ளே போயி அதகளம் செய்த தினா கோஷ்டியின் குறும்பு, தனி கெத்துதான்.