கொரோனா தொடர்பான விஷயங்களில் அதிமுக - திமுக வழக்கம்போல அறிக்கை லாவணி தொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், இரண்டே நாட்களில் மக்கள் மத்தியில் தன் பாப்புலாரிட்டியை உயர்த்திக்கொண்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

 
இதுவரை உலகமே கண்டிராத வகையில் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் மக்களைப் பாடாய்படுத்திவருகிறது. நம் சமூகம் இதற்கு முன்பு கேட்டிராத லாக்டவுன்களை மக்கள் சந்தித்துவருகிறார்கள். கொரோனா வைரஸ் இன்னும் எத்தனை நாட்கள், மாதங்கள் நீடிக்கும், அதுவரை தங்கள் வாழ்க்கையை நடத்த என்ன வழி என்று தெரியாமல் பெரும் குழப்பமான, மன அழுத்தமான சூழ்நிலையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இருந்துவருகிறார்கள். ஆளுங்கட்சியான அதிமுகவும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் கொரோனா நிவரணப் பணிகளில் ஈடுபட்டும் வருகிறார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக திமுகவும் அதிமுகவும் கொரோனா வைரஸ் தொடர்பாக விஷயங்களில் அறிக்கை போர் வாசிப்பதையும், பத்திரிகை சந்திப்புகளில் பரஸ்பரம் குற்றம்சாட்டியும் பேசி, தங்கள் வழக்கமான அரசியலையும் தொடங்கிவிட்டார்கள்.
திமுக, அதிமுகவினரின் இந்த அரசியலுக்கு இடையேதான் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த இரு தினங்களாக லைம் லைட்டில் வந்துள்ளார். அதற்கு அவருடைய ஒரு வீடியோவும் ஓர் அறிக்கையும் உதவியிருக்கிறது. உடல்நலம் குன்றி வீட்டில் ஓய்வெடுத்துவரும் விஜயகாந்துக்கு, அவருடைய மனைவி பிரேமலதா சேவிங் செய்து, தலைக்கு டை அடித்து, கை காலில் நகங்களை வெட்டிவிடும் வீடியோ நேற்று முன்தினம் வெளியானது. அந்த வீடியோ தேமுதிகவினரே எதிர்பார்க்காத அளவுக்கு வைரல் ஆனது. எப்படியிருந்த மனிதன் இப்படி ஆயிட்டாரே.. என்ற வகையில் அந்த வீடியோ வைரலானது.
அந்தச் சூடு கொஞ்சம்கூட குறையாத நிலையில்தான் விஜயகாந்தின் அறிக்கை சமூக ஊடங்களில் ரவுண்டு கட்டி வைரலானது. சென்னையில் கொரோனா வைரஸால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் மறுத்து போராட்டம் நடத்திய விவகாரத்தில் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார். “கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடலை மாமண்டூர் அருகே உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியில் புதைத்துக்கொள்ளலாம்” என்று விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை, அவரை சமூக ஊடங்களில் உச்சியில் உட்கார வைத்து கொண்டாட வைத்துவிட்டது.


பல தரப்பினரும் விஜயகாந்தின் இந்த அறிவிப்பை ஷேர் செய்து புகழாரம் சூட்டிவருகிறார்கள். இதில் குறிப்பிடும்படியான விஷயம், கட்சி மாச்சிரியங்களைத் தாண்டி மக்கள் விஜயகாந்தின் இந்த அறிவிப்பை வரவேற்றவண்ணம் உள்ளார்கள். விஜயகாந்தைப் பார்த்து மதிமுக நிர்வாகி ஒருவரும் கொரோனா வைரஸால் இறந்தவர்களைப் புதைக்க தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். இந்த இரு விஷயங்களாலும் இரண்டே நாட்களில் விஜயகாந்த் மக்களைத் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டார் என்று அவருடைய நலவிரும்பிகளும் தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.