தே.மு.தி.க. பற்றி இணையதளத்தில் வந்த அந்த விமர்சனத்துடன் இந்த செய்தியை துவக்குவது பொருத்தமாக இருக்கும்.... 

“கைகால்கள் குச்சியாகி, கண்களில் பசிப் பஞ்சேறி, வறுமையின் விளிம்பில் வதங்கும் ஒரு மேடை நாடக நடிகர், பழைய ஞாபகத்தில் மீண்டும் கட்டப்பொம்மனின் அடவை எடுத்துக் கட்டிக் கொண்டு நின்றால் எந்த சாக்சன் துரை பயப்படுவாம்லே? இதுதாம் இன்னைக்கு நம்ம கேப்டன் கட்சியோட நெலம!” விமர்சகரின் வார்த்தைகள் ஊசியாய் குத்தினாலும், உண்மை அதுதானே. 

10, 11 என்று எகிறியடித்த அக்கட்சியின் வாக்கு வங்கி இன்று நோட்டாவுடன் போட்டி போடவே மூச்சு வாங்குகிறது ஒவ்வொரு தொகுதியிலும், இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வேறு வந்துவிட்டது. இந்த சூழலில், தமிழகத்தில் மெகா அணியை அமைக்க நினைக்கும் பி.ஜே.பி., தன்னை இணைத்துக் கொள்ள சொல்லி அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுத்து வருவது விளக்குவதற்கு அவசியமற்ற உண்மை. அதே வேளையில் தி.மு.க.வின் அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க. வி.சி.க, கம்யூனிஸ்டுகள் போன்றவை இருப்பது போல் தங்களின் கூட்டணியும் பல கட்சிகளுடன் பெரிதாய் அமைய வேண்டுமென்றது டெல்லியின் விருப்பம். 

அதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழிசை சமீபத்தில்‘தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம்.’ என்று பா.ம.க மற்றும் தே.மு.தி.க.வை தங்கள் அணிக்குள் கொண்டு வரும் மூவ்கள் போய்க் கொண்டிருப்பதை சூசகமாக தெரிவித்தார். கேப்டன் மற்றும் ராமதாஸ் இருவரின் பிரதிநிதிகளுடன் இன்ஃபார்மலான பேச்சுவார்த்தை ஒரு ரவுண்டு முடிந்துவிட்டது என்றே தகவல்.

 

இந்நிலையில், அமெரிக்காவில் சிகிச்சையிலிருக்கும் கேப்டனுக்கு உறுதுணையாக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா தனது தம்பி சுதீஷ் மூலமாக  பி.ஜே.பி.யிடம் தேர்தலில் கூட்டணி வேண்டுமென்றால் இன்னென்ன சகாயங்களை, சலுகைகளை தரவேண்டும் எனும் இலக்கில் சில தகவல்களை தரச்சொல்லி இருக்கிறார். அக்கா சொன்னது போலவே கைமாறியிருக்கிறது தகவல். ஏற இறங்க பார்த்த பி.ஜே.பி.யின் புள்ளிகள் சிலர், கெத்தாக சிரித்துவிட்டு...”இன்னு 2011-ல் இருக்கீங்களா? இப்போ உங்களோட ஓட்டுவங்கி என்னான்னு உங்களுக்கே தெரியும்தானே! அப்புறம் எதுக்கு இந்த பில்ட் அப்ஸெல்லாம்? நாங்களும் முழு சர்வே எடுத்துட்டோம், உங்க வலிமை என்னன்னு எங்களுக்கும் தெரியும். 

எங்க கூட கூட்டணி வைக்கிறது உங்களுக்குதான் பாதுகாப்பே தவிர, எங்களுக்கு ஒண்ணும் பெரிய பலனில்லை. எதுவானாலும் அமெரிக்காவுல இருந்து விஜயகாந்த் வரட்டும் அப்புறம் பார்த்துக்கலாம். அதுக்கு முன்னாடியே கண்டிஷன் போடுறதெல்லாம் நட்பான பயணத்துக்கு சரிப்பட்டு வராது.” என்று செம்ம காட்டு காட்டிவிட்டார்களாம். இந்த சேதி சூடாக அக்காவுக்கு பறக்க, பிரேமா செம்ம சைலண்டாகிவிட்டாராம்.