தேமுதிக நிர்வாகிகள் பலரும் தலைமை உடனான தொடர்பை துண்டித்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் கடந்துவிட்டது. தோல்வியிலிருந்து அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் என்று அடுத்தடுத்த செயல்களில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் தேமுதிக மட்டும் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கூட பிரேமலதா விஜயகாந்த் அரசியல் பேசவில்லை. 

இந்த நிலையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்க மாவட்ட வாரியாக கூட்டங்களை ஏற்பாடு செய்ய பிரேமலதா முடிவு செய்திருந்தார். இதற்காக மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது பெரும்பாலானவர்கள் தங்கள் ஊரிலேயே இல்லை சொந்த வேலையாக வெளியே இருக்கிறோம் என்று கதை கட்டி உள்ளனர். இன்னும் சிலரோ கண்டிப்பாக செய்துவிடலாம் என்று கூறுவதோடு சரி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது இல்லை. 

தலைமையிடம் இருந்து வரும் செல்போன் அழைப்புகளையும் தேதிமுக மாவட்ட செயலாளர்கள் தற்போது எடுக்க தயங்குகின்றனர். மேலும் சென்னைக்கு அடிக்கடி வந்து செல்லும் மாவட்ட செயலர்கள் கூட தற்போது தங்கள் ஊரிலேயே முடங்கி கிடக்கின்றனர். கட்சிப் பணிகள் எதையும் யாரும் செய்வதில்லை. சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தவிர யாரும் வருவதில்லை.

 

சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் வீடும் வெறிச்சோடிய காணப்படுகிறது. தினமும் ஏதேனும் மாவட்ட செயலாளர்கள் வருவதும் போவதுமாகவே கேப்டன் வீடு இருக்கும். ஆனால் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் தவிர வேறு யாரும் தற்போதைக்கு கேப்டன் வீட்டை எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. இதுகுறித்து பார்த்தசாரதியிடம் பிரேமலதா விஜயகாந்த் கேள்விகளை எழுப்ப அதற்கு அவரோ நமது நிர்வாகிகள் அனைவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டனர் என்று கூறிவிட்டு சிரித்துள்ளார்.