திமுக - அதிமுகவுடன் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தேமுதிகவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுவிட்டதால், கூட்டணி குறித்தோ தலைமை குறித்தோ வாட்ஸ்அப்பில் கருத்துகளைப் பதிவிட வேண்டாம் என தேமுதிக மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சி தலைமை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது தேமுதிக. தேமுதிகவின் பேர அரசியல் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. உச்சகட்டமாக திமுக - அதிமுகவுடன் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி, அது வெளிப்பட்டது அந்தக் கட்சி மீதான நம்பகத்தன்மையைக் குறைத்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். தேமுதிகவின் இந்த செயல்பாடுகளால் அக்கட்சியினர் மத்தியிலேயே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரேமலதாவையும் சுதிஷையும் தேமுதிகவினர் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.


குறிப்பாக விழுப்புரம் மாவட்ட தேமுதிக வாட்ஸ்அப் குழுவில் பிரேமலதா, சுதீஷுக்கு எதிராக அக்கட்சி தொண்டர்கள் கடுமையான கருத்துகளை பதிவுசெய்ததாகக் கூறப்படுகிறது. தேமுதிகவினரின் வாட்ஸ்அப் விமர்சனங்கள் தலைமைக்கு தெரிய வந்ததையடுத்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை தலைமை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், ‘தங்களது மாவட்டத்தில் யாரேனும் தலைமை கழகத்தைப் பற்றியோ, கூட்டணி குறித்தோ சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவதை தடுக்க வேண்டும்; யாராவது மீறி செய்தால் தங்கள் மாவட்டத்தின் சார்பில் கண்டிக்கவேண்டும்; நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுவருகிறது. கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் தலைமை கழகம் அறிவிக்கும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன
இந்தச் சுற்றறிக்கையைத் தேமுதிக மாவட்ட செயலாளர்கள்  வாட்ஸ்அப் குழுக்கள், ஃபேஸ்புக். ட்விட்டர் குழுக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர். தலைமைக்கு எதிராக எந்தக் கருத்துகளையும் பதிவிடக் கூடாது; தொண்டர்கள் யாராவது வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தால், அதை உடனடியாக நீக்க வேண்டும்; தேமுதிகவை விமர்சிப்போருக்கு தக்கப் பதிலடிக் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் அறிவுரை வழங்கிவருகிறார்கள்.