கள நிலவரம் தெரியாமல் அ.தி.மு.க கூட்டணியில் 9 தொகுதிகளை கேட்டு வரும் தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தைக்கே வாய்ப்பில்லை என்று பா.ஜ.கவிடம் அமைச்சர் தங்கமணி கைவிரித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் சரி சட்டமன்ற தேர்தலிலும் சரி பா.ம.க வட மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை பெற்றது. பெரும்பாலான தொகுதிகளில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை பா.ம.க பெற்றது. அதிலும் சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கி பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் வாங்கியதுடன் தி.மு.க வேட்பாளர்கள் தோற்கவும் காரணமாக இருந்தது. 

இதனால் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் பா.ம.கவிற்கு ஏழு தொகுதிகளை அள்ளிக் கொடுத்துள்ளது அ.தி.மு.க. அதே சமயம் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.கவிற்கு 5 தொகுதிகளை ஒதுக்கியதோடு அ.தி.மு.க ஒதுங்கிக் கொண்டது. ஆனால் தே.மு.தி.கவுடன் மட்டும் பேச்சுவார்த்தையை கூட ஆரம்பிக்காமல் அ.தி.மு.க இழுத்தடித்து வருகிறது. இதற்கு காரணம் கடந்த காலங்களில் தே.மு.தி.க தரப்பு அ.தி.மு.கவிடம் காட்டிய ஓவர் பில்டப் தான் என்கிறார்கள். அதுவும் 2011 சட்டமன்ற தேர்தலில் அப்போதைய ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் போன்றோரை நடையாய் நடக்க வைத்து பிறகு தான் கூட்டணியை உறுதி செய்தார் விஜயகாந்த். 

இதனால் தான் இந்த முறை விஜயகாந்தோடு பேசுவதற்கு அ.தி.மு.க தரப்பில் யாரும் முன்வரவில்லை. பா.ம.க, பா.ஜ.க., ஏன் த.மா.காங்கிரசோடு கூட அமைச்சர் தங்கமணி பேசிவிட்டார். ஆனால் தே.மு.தி.க தரப்பை தொடர்பு கொள்ள அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். அதிலும் விஜயகாந்தால் தற்போது ஒரு நிமிடம் கூட தொடர்ந்து நிற்க முடியாது என்கிறார்கள். மேலும் தே.மு.தி.க என்றால் விஜயகாந்த் தான். அவர் கள அரசியலில் இல்லாமல் பிரேமலதாவை மட்டும் கூட்டணியில் சேர்த்து அ.தி.மு.கவிற்கு என்ன பலன் என்று கேட்கிறார் தங்கமணி. 

மேலும் ஒன்பது தொகுதிகள் வேண்டும் என்று பா.ஜ.க மூலம் தே.மு.தி.க தகவலை பாஸ் பண்ணியதையும் அ.தி.மு.க விரும்பவில்லை. இருந்தாலும் தே.மு.தி.க கூட்டணிக்கு வர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர்கள் மட்டும் அல்லாமல் தேசிய அளவிலான நிர்வாகிகளும் விரும்புகிறார்கள். எனவே பியூஸ் கோயல் விஜயகாந்திற்காக அமைச்சர் தங்கமணியிடம் பேசியுள்ளார்.

அப்போது, தே.மு.தி.கவிற்கு வாக்கு வங்கியே தற்போது இல்லை, கடந்த தேர்தலில் விஜயகாந்தே படுதோல்வி அடைந்துள்ளார். எனவே வாக்கு வங்கியும் இல்லை, பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வரவும் வாய்ப்பு இல்லை. எனவே அவர்களுக்கு 2 தொகுதியே அதிகம் என்று அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் தே.மு.திக. அதிமுக கூட்டணிக்கு வருவது சிரமம் தான் என்கிறார்கள்.