நடக்கவிருக்கும் தேர்தலில் பிஜேபி அதிமுக கூட்டணி உறுதிசெய்யப்பட்ட நிலையில், அந்த அணியில் எதிரணியை சமாளிக்க வட மாவட்டங்களில் வாக்கு வங்கியை வலுவாக வைத்திருக்கும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளையும் இழுத்துப்போடும் பணி தீவிரமடைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு அதிமுக - பிஜேபி கூட்டணியில் இணைவது குறித்து தேமுதிக பேசி வருவதாக அக்கட்சியின் இளைஞரணி செயலர் சுதீஷ் தெரிவித்திருந்தார். ஆனால், பாமக இடம் பெறும் கூட்டணியில் அங்கம் வகிப்பதை தேமுதிக விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் கடந்த முறை அதிமுக இல்லாத தேமுதிக, சேலம் மக்களவை தொகுதியை போராடி பெற்று தோல்வியை தழுவியது. 2014-ல் பாமக சார்பாக  அருள்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் செய்து வந்த நிலையில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் அடம் பிடித்து சேலத்தில் போட்டியிட்டு  படுதோல்வியை சந்தித்தார். 

இதற்கு பாமகவின் உள்ளடி வேலைதான் தேர்தலில் தோற்க காரணம் என தேமுதிக நினைக்கிறது. அதனால்தான் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற விரும்பவில்லை. இந்த நிலையில் சேலம் தொகுதியை இப்போதும் தேமுதிக கேட்கிறதாம். அதுவும் எல்.கே.சுதீஷ்தான் இந்த தொகுதி தனக்கு வேண்டும் என  பிடிவாதமாக இருக்கிறாராம். 

ஆனால், அதிமுகவோ கண்டிப்பாக கொடுக்க முடியாது என செல்கிறதாம். ஏன் என்றால் தனது சொந்த மாவட்டம் என்பதால் பார்த்து பார்த்து பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ள  எடப்பாடி பழனிசாமி, இம்முறை சேலத்தில் அதிமுக வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளாராம். பதிலுக்கு தங்களுக்காக தயார் செய்து வைத்திருந்த  கள்ளக்குறிச்சியை தேமுதிகவுக்கு தருகிறோம் என சொன்னதாம் அதிமுக. 

இந்த ஒரு தொகுதியால்  கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக பிஜேபியை விட்டால் வேறுவழியில்லை என்ற நிலை தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவிற்கு அப்படி ஒன்றும் இல்லை, பிஜேபியும் தேமுதிகவை விடுவதாக இல்லை, பிஜேபி மூலமாக சேலம் தொகுதியைக் கைப்பற்ற பிளான் போடுகிறது தேமுதிக. சேலத்தை எப்படியும் வாங்கி கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாம் பிஜேபி.