தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி அதிமுக சார்பில் தொடர்புகொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுக சார்பில் அண்மையில் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல தேமுதிக சார்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் அல்லது அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்றே அரசியல் அரங்கில் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் அதிமுக தரப்பில் தேமுதிகவைத் தொடர்புகொண்டு பேசியதாகத் தற்போது தகவல்கள் கசிந்துவருகின்றன.

அதிமுகவில் தொகுதி பங்கீட்டுக்கான குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, தேமுதிக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள துணை செயலாளர் சுதீஷை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பலமான கூட்டணியை திமுக அமைத்துள்ளது என்ற பார்வை இருப்பதால், அதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அதிமுகவும் முயற்சித்துவருகிறது. அதன் அடிப்படையில் திமுகவில் இடம்பெறாத கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்க அதிமுக முன்னுரிமை கொடுக்க உத்தேசித்துள்ளது. அதன் காரணமாகவே தேமுதிகவைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள விஜயகாந்த், பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை சூடுபிடிக்கும் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.