காற்றில் பறக்கும் கேப்டன் மானம்: போட்டோவை கழற்றி எறிந்த அ.தி.மு.க., காத்திருந்து மூக்கை அறுத்த தி.முக., தேம்பி அழும் தே.மு.தி.க. 

அரசியலில் ஆனைக்கும் சறுக்கும்தான். அதிலிருந்து பாடம் கற்றுவிட்டு, அடுத்த தேர்தலில் சாணக்கியத்தனமாக காய்களை நகர்த்தி மேலேறி வருபவர் தான் வெற்றிகரமான அரசியல்வாதி. ஆனால், இந்த பண்பினை புறந்தள்ளியதாலோ என்னவோ மிகவும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது தே.மு.தி.க! என்று  வெளுத்து வாங்குகிறார்கள் விமர்சகர்கள். 

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைக்க தி.மு.க. எவ்வளவோ இறங்கி வந்தும் வீணாக வீம்பு பிடித்து இழுத்தடித்து கடைசியில் தங்கள் கட்சியின் உடைப்புக்கு தாங்களே காரணமாயினர் விஜயகாந்த், பிரேமல்தா, சுதீஷ் ஆகியோர். அந்த தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து வாஷ் அவுட் ஆன தே.மு.தி.க. எந்த சப்தமுமில்லாமல் போனது அதன் பிறகு. 

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவில் எடுத்துக் கொண்டிருந்த சிகிச்சையை ஒரு கட்டத்தில் ஒத்திவைத்துவிட்டு அவசரமாக வெளியேறி தமிழகம் வந்தார் விஜயகாந்த். அவரை பி.ஜே.பி.யின் முக்கிய முகங்களான மத்தியமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் பொன்னார், தமிழிசை ஆகியோர் சந்தித்து அ.தி.மு.க. கூட்டணியினுள் வரச்சொல்லி அழைத்தனர். அதிரடியாக ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார், ரஜினிகாந்த் கூட உடல் நலன் விசாரித்தார். இவர்கள் இருவரின் பேச்சிலும் அரசியல் இருந்ததாக பிரேமலதா போட்டுடைத்தார். ரஜினி வந்தது பி.ஜே.பி.க்காக என்று பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று ‘அவசர ஆலோசனை கூட்டம்’ எனும் பெயரில் சாவகாசமாக ஒரு கூட்டத்தை நடத்தியது கேப்டன் டீம். ஆனாலும் யாரோடும் கூட்டணி உடன்படிக்கை போடாமல் இருந்த விஜயகாந்த் டீமை துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் வீடு சென்றே சந்தித்தனர். 

சர்வகட்சியின் தலைவர்களும் இவ்வளவு இறங்கி வந்து கூட எதற்கும் ஒத்துவராமல் இருந்தார் விஜயகாந்த். இந்நிலையில், நேற்று மாலை முதல் ‘அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதி. ஐந்து சீட்டுக்கு ஓ.கே. சொல்லிவிட்டார்கள்’ என்று தகவல் வெளியானது. இதன் மூலம் இன்று சென்னை வண்டலூரில் நடக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ளும் மேடையில் விஜயகாந்தும் அமர்த்தப்படுவார்! என்று எதிர்பார்க்கப்பட்டது. 
இதை உறுதிப்படுத்தும் விதமாக மேடையில்  கூட்டணி தலைவர்களின் படங்களோடு, விஜயகாந்தின் படமும் ஒட்டப்பட்டது.

ஆனால் சற்று முன் அந்தப் போட்டோ நீக்கப்பட்டது! என்று விழா மேடை படத்தோடு தகவல் பரவுகிறது. 
விஜயகாந்துக்காக மிகவும் இறங்கிவந்து, எதிர்பார்த்தும் அந்த டீம் உச்சபட்ச பேரத்தில் இருப்பதால், கழற்றிவிடுவோம் கேப்டனை! எனும் முடிவுக்கு அ.தி.மு.க. அதிரடியாய் வந்துவிட்டதாக தகவல். இந்த சூழலில் தே.மு.தி.க.வின் முக்கிய புள்ளிகள் சிலர் தி.மு.க.தரப்பை நாடி துரைமுருகனை சந்திக்க, ‘எங்களிடம் சீட் இல்லை. கூட்டணி பங்கீடு முடிந்துவிட்டது’என்று துரைமுருகன் ஒரேபோடாக போட்டு அனுப்பிவிட்டாராம். 

ஆக கடந்த 2016 தேர்தல் போலவே உட்கார உச்சாணி கொம்பு எதுவும் கிடைக்காமல் அல்லாட்டத்துக்கு வந்துவிட்டது தே.மு.தி.க! இந்த முறையும் தங்களுக்கு தாங்களே சூப் வைத்துக் கொண்டார்கள்! ஒற்றை மனிதராய் நின்று சேர்த்து வைத்த கேப்டனின் மானம் மீண்டும் காற்றில் பறக்க துவங்கிவிட்டது!...என்று வெளுக்கின்றன விமர்சனங்கள். இந்த தேர்தலில் பசையான கூட்டணி கிடைத்து, செழிப்பாக தேர்தலை சந்தித்து, வகையாய் சில வெற்றிகளை பெற்று செட்டிலாவோம்! என நினைத்த தே.மு.தி.க.வின் எஞ்சியிருக்கும் நிர்வாகிகள் தேம்ப துவங்கிவிட்டதாக தகவல்.