தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ள நிலையில், கேப்டனுக்கு என்ன ஆச்சு என்கிற பதற்றத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் உள்ளனர்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் மேற்கொண்ட சூறாவளி பிரச்சாரத்தில் விஜயகாந்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவ்வப்போது நேரில் சென்று விஜயகாந்த் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனாலும் உடல் நிலை சரியாகாத நிலையில் கடந்த 2014ம் ஆண்டு துவக்கத்தில் சிங்கப்பூருக்கு ரகசியமாக சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார் விஜயகாந்த்.

அப்போதே விஜயகாந்த் உடல் நிலை குறித்து பல்வே யூகங்கள் எழுப்பப்பட்டன. அவருக்கு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் பரவலாக பேச்சுகள் இருந்தன. ஆனால் விஜயகாந்த் வழக்கமான உடல் பரிசோதனைக்கே சிங்கப்பூர் சென்று வந்ததாக அப்போது (2012) தே.மு.தி.க நிர்வாகிகள் விளக்கம் அளித்து வந்தனர். இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார்.

சிங்கப்பூரில் வைத்து மீண்டும் விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் தே.மு.தி.க தரப்பில் இருந்து விஜயகாந்துக்கு உண்மையில் என்ன பிரச்சனை என்று தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம் சிங்கப்பூர் சென்று வந்த பிறகு, விஜயகாந்தால் நீண்ட நேரம் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தான் தே.மு.தி.க பொதுக்கூட்டம், ஆர்பாட்டம் போன்றவற்றில் கூட விஜயகாந்த் அமர்ந்தபடியே பேச ஆரம்பித்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த்துக்கு சிங்கப்பூரில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் பக்கவிளைவுகளாக மேலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜயகாந்த்தால் பேசக்கூட முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு விஜயகாந்தை அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக விஜயகாந்தை சிகிச்சைக்காகவே அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதாக அவர’து கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.கவினர் விஜயகாந்த் உடல் நலம் தேற வேண்டும் என்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இது தான் தே.மு.தி.க தொண்டர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுநாள் வரை சிகிச்சைக்கு சென்று வரும் போது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை மட்டும் தொண்டர்களிடம் தெரிவிக்கப்பட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யுமாறு கட்சி தலைமை ஏன் கேட்டுக் கொண்டுள்ளது, ஒரு வேளை விஜயகாந்துக்கு மிகத் தீவிரமான பிரச்சனை ஏதும் இருக்கிறதா? என்று அவர்கள் பதறுகிறார்கள். இதே போல் விஜயகாந்தின் உறவினர்களும் அவரது உடல் நிலை குறித்து சற்று கலக்கத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

அதனால் தான் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் கூட அவரது மாமா உடல் நிலை சீராக வேண்டும் என்று கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்கிறார். ஆனால் முகம் வாடிய நிலையில் தான் பூஜைகளில் சுதீஷ் கலந்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் அமெரிக்கா சென்று சிகிச்சை முடிந்து புதிய விஜயகாந்தாக கேப்டன் திரும்புவார் என்று தே.மு.தி.க தலைமை கழக நிர்வாகிகள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.