பாஜக வேண்டாம்... அதிமுகவுடன் கூட்டணி அமையுங்கள்.? பிரேமலதாவிடம் கோரிக்கை வைத்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம், அதிமுகவுடன் கூட்டணி அமையுங்கள் என பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாமக, தேமுதிக நிலை என்ன.?
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம், கூட்டணி கட்சியினரிடம் பேரம் பேசி அதிக தொகுதிகளை வாங்க வேண்டும் என்ற முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு ஏற்றார் போல் தமிழகத்தில் திமுக கூட்டணியை தவிர அதிமுக மற்றும் பாஜக இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. இழுபறியாகவே உள்ளது.
எனவே அதிமுக மற்றும் பாஜக தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் வகையில் வட மற்றும் தென் மாவட்டங்களில் பலமாக இருக்கக்கூடிய பாமக மற்றும் தேமுதிகவை இழுக்க போட்டி போட்டு வருகிறது. ஆனால் இரண்டு கட்சிகளும் தற்போது வரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இருந்த போதும் தங்களுக்கு என்ன விருப்பம் என்ற தகவலை பாஜக மற்றும் அதிமுக தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.
அதிமுகவுடன் கூட்டணி அமையுங்கள்
இந்த நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அதிமுகவிடம் கூட்டணி அமைக்க பிரேமலதாவிடம் வலியுறுத்தியுள்ளனர். தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மட்டும் மனதில் வைக்காமல் சட்டமன்ற தேர்தலையும் கருத்தில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளனர். எனவே அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் மற்றோரு தரப்பினர் நாம் விரும்பும் தொகுதிகளை கொடுக்கும் கட்சியோடு கூட்டணி அமையுங்கள் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள்
கரூரில் ஜோதிமணிக்கு கல்தா... களம் இறங்கும் செந்தில் பாலாஜியின் மனைவி.? வெளியான பரபரப்பு தகவல்