அரசியல்வாதியாவது எளிது ஆனால் அரசியல் ஆளுமையாவதற்கு, உள்ளபடியே ஆகப்பெரிய திறமை வேண்டும். அவற்றில் மிக முக்கியமானது, மேடைப்பேச்சு. அதிலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் பேச்சுத் திறமை இல்லாத தலைவர்கள் புறந்தள்ளப்பட்டதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.

அண்ணா, கருணாநிதி, வைகோ போன்றோர் அவர்களின் மேடைப் பேச்சுக்காகவே ஆராதிக்கப்பட்டனர். ஜெயலலிதாவின் பேச்சில் பழைய வரலாறுகள், சக அரசியல் தலைவர்களின் பேச்சுக்களை பற்றிய மேற்கோள்கள், சர்வதேச அரசியல் பற்றிய குறிப்புகள் ஆகியன பெரிதாய் இருக்காது. ஆனால் அவரது தைரியம் நிறைந்த சவால்களுக்காகவே மக்கள் அவரது பேச்சை விரும்பினர். 

ஜெயலலிதாவுக்கு பின் பல ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வந்தாலும் கூட, மிக மிக குறுகிய காலத்தில் மக்களை தன் பேச்சால் கவர்ந்தவர் ஒருவரென்றால் அது விஜயகாந்த் மட்டுமே. திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களை ஒப்புவிக்க மாட்டார், ரோமாபுரி உள்ளிட்ட மேலை நாடுகளை மேற்கோளிட மாட்டார். ஆனாலும் அவரது பேச்சுக்களை கைதட்டி கொண்டாடும் மக்கள் வெள்ளம். 
காரணம்? சக தமிழனில் ஒருவனாக நின்று, ஆளும் வர்கத்தின் அநியாயத்தை துளி அச்சமின்றி கேள்வி கேட்பார். சாமான்ய தமிழன் ஒவ்வொருவனும் கேட்க நினைக்கும் கேள்வியை விஜயகாந்தே கேட்பார்! அதனால்தான் அவரை தங்களில் ஒரு மனிதனாக பார்த்து, தலைவராக்கினர் மக்கள். 


பல அரசியல் பஞ்சாயத்துக்களுக்கு தன் அசால்ட் பேச்சினால் தீர்ப்பு சொன்ன சின்ன கவுண்டருக்கு கண்ணு பட்டே விட்டது. சமீப சில வருடங்களாக அவரது குரலில் பிரச்னை. அதை சரி செய்திடத்தான் அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் விஜயகாந்த். டேக் ஆப் ஆகும் முன் தன் கழக நிர்வாகிகளை அழைத்து பேசினார். அப்போது, திருப்பூர் அருகே செப்டம்பர் 16-ல் தே.மு.தி.க. நடத்த இருக்கும் மாநாட்டில் தன் பழைய கம்பீர மற்றும் தெளிவான பேச்சை மீண்டும் காணலாம் என்று நம்பிக்கை ஊட்டியிருந்தார். 

கேப்டனின் இந்த வார்த்தைகள் அப்படியே தொண்டர்களுக்கும் பாஸ் செய்யப்பட்டு பெரும் சந்தோஷத்தை கொடுத்திருந்தன. கேப்டன் அமெரிக்காவில் தன் குரல் வளத்தை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று ட்விட்டரில் தனது மனைவி, மகன்களோடு அமெரிக்காவில் இருக்கும் படங்களை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் விஜயகாந்திடமும் பிரேமலதாவிடமும் தொண்டர்களின் உணர்வை எடுத்துச் சொல்லியிருக்கிறார் சுதீஷ். இதையடுத்துதான் போட்டோவை வெளியிட்டுள்ளார் பிரேமலதா.