திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவேன்.  ஸ்டாலின் மூலம் என் அரசியல் பயணம் வெற்றிபெறும் என்று நம்புகிறேன. கரூரில் உள்ள நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் திமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன். எந்த தேர்தல் வந்தாலும் திமுகவிற்காக பாடுபடுவேன் அடுக்கடுக்கான சபதத்தோடு ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார் அமமுகவில் இருந்த செந்தில் பாலாஜி.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  தினகரன், சிலர் வெளியே செல்வதால் எங்கள் இயக்கம் ஒன்றும் சிதைந்துவிடாது. அமமுக ஒன்றும் மதிமுக, தேமுதிக போல ஆகிவிடாது. எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் அவரிடம் அமமுக உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. அதை மட்டும் அவர் திருப்பி கொடுக்க வேண்டும் எனக் கூறினார். 

தொடர்ந்துப் பேசிய அவர், செந்தில் பாலாஜிக்கு அளித்த வரவேற்பை பார்த்தாலே, திமுக கட்சி அமமுகவை பார்த்து பயப்படுவது தெரிகிறது. இது திமுகவின் நிலைமை மிக மோசமாகிவிட்டதை இது காட்டுகிறது. திமுக அந்த அளவிற்கு ஆர்கே நகரில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதனால்தான் எங்கள் கட்சி உறுப்பினருக்கு அவ்வளவு மரியாதை அளிக்கிறார்கள் என பேசினார்.

இப்படி, தனது கட்சியில் உள்ள ஒருவர் போனதற்காக எதிர்கட்சியாக இருந்த தேமுதிகவையும், திமுகவிலிருந்து வெளியில் வந்து மாபெரும்  உருவெடுத்து பலப் போராட்டங்களை முன்னின்று நடத்தி வரும் வைகோவையும் நேற்று முளைத்த தினகரன் இப்படி கலாய்த்திருப்பது எந்த வகையில் நியாயம்? மதிமுகவும் தேமுதிகவும் அப்படியென்ன நிலையை சந்தித்திருக்கிறது? விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்து வருவதால், விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, மற்றும் அவரது மகன் களத்தில் இறங்கி கட்சி வேலையை பார்த்து வருகின்றனர். வைகோ வோ பம்பரமாய் சுற்றி கட்சிப்பணியை கணக் கட்சிதமாக செய்து வருகிறார். 

இப்படி இருக்கையில் தினகரன் எப்படி எங்கள் கட்சியைப் பற்றிப் பேசலாம்? எங்கள் கட்சி வலுவாகத்தான் உள்ளது தினகரன் தான் காசுக்காக மலைப்போல்  நம்பியிருந்த செந்தில் பாலாஜி போன கடுப்பில் பேசுகிறார் என கடும் கோபத்தில் கொந்தளித்திருக்கிறார்கள் மதிமுக  தேமுதிக நிர்வாகிகள்.