சசிகலா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி உதயநிதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது எடப்பாடி பழனிசாமி குறித்தும் சசிகலா குறித்தும் தொடர்புபடுத்திப் பேசி மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.

இது குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.அதில் பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப் பெரிய தலைவர்கள் எல்லாம் இழிவுபடுத்திப் பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை முக ஸ்டாலின் மகன் நிரூபித்திருக்கிறார். திமுகவிற்கும்  கண்ணியத்திற்கும் ஒருநாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி.

நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேசமுடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்தவழி அப்படி பெண்களை பெரிதும் மதிக்கின்ற தமிழ் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது என அவர் பதிவு செய்துள்ளார்.

 

உதயநிதி ஸ்டாலினின் இத்தகைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பலரும் கருணாநிதி காலம் தொடங்கி இன்று வரை பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதிலிருந்து திமுக மாற போவதில்லை  எனக்கூறி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சசிகலா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி உதயநிதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்.