அதிமுகவில் குட்டையைக் குழப்பி, அக்கட்சியை டிடிவி தினகரன் வீணடித்துவிட்டார் என்று அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
அண்ணா திராவிடர் கழக பொதுசெயலாளர் திவாகரன் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விமர்சித்து கருத்து தெரிவித்தார்.
 “தமிழகத்தில் நீட் தேர்வும் ஹைட்ரோ கார்பன் திட்டமும் முக்கிய பிரச்னையாக இருந்துவருகிறது. இத்திட்டங்களை எதிர்ப்பதாக கூறும் அதிமுக அரசு, இத்திட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை போலீஸார் கைது செய்கிறார்கள். இது அதிமுக அரசின் இரட்டை வேடத்தைதான் காட்டுகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக எந்தக் கட்சி தமிழகத்தில் போராட்டம் நடத்தினாலும் அதற்கு  நாங்கள் ஆதரவு அளிப்போம். தமிழக அமைச்சர்கள் திமுக மற்றும் எதிர்க்கட்சிகளை குறை சொல்லி பேசுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இது தவறானது.


அதிமுகவும் அரசும் கட்டுக்கோப்பாக இருப்பதுபோலவே தெரியவில்லை. இந்த அரசு செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பத்திரிகைகளில் பேசிவருகிறார்கள். ஆனால், அதற்காக எந்தவிதமான ஆக்கபூர்வ முயற்சியை அவர்கள் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தபோதும் அவர்கள் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. 


 அதிமுகவில் குட்டையை குழப்பி அந்தக் கட்சியை டிடிவி தினகரன் வீணடித்து விட்டார். அதிமுக அரசை கவிழ்த்து விடுவதாகப் பேசிபேசி தொண்டர்களின் நம்பிக்கை இழக்க வைத்துவிட்டார். தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான தீர்ப்பை வழங்கிவிட்டார்கள்” என திவாகரன் தெரிவித்தார்.