தகுதி நீக்கத்தால் பதவியை இழந்த சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைத்துக்கொண்டனர்.

தகுதி நீக்கத்தால் பதவியை இழந்த சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைத்துக்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அருகே உள்ள எதிர்கோட்டையைச் சேர்ந்தவர் எஸ்.ஜி.சுப்பிரமணியன் (58). இவர் ஒன்றிய அதிமுக செயலாளராகவும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

2016-ல் சாத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் டி.டி.வி. தினகரன் அணியில் சேர்ந்தார். அவருடன்கட்சித் தாவலில் ஈடுபட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 2019-ல் மக்களவைத் தேர்தலுடன் சாத்தூர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் அமமுக சார்பில் எஸ்.ஜி. சுப்பிரமணியன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பின்னர் மீண்டும் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பின்னர் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகி களிடையே கருத்து வேறுபாடால் எஸ்.ஜி.சுப்பிரமணியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சாத்தூா் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஜி.சுப்பிரமணியன், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விருதுநகா் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவரும், சாத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்புக் கோரினார். தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டதால், அவர் அதிமுகவின் உறுப்பினராக இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது.