மதுரையில் நடைபெற்ற ஆலோசனையின் போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் கண் கலங்கிக் கொண்டே புலம்பியதால் என்ன செய்வது என்று தெரியாமல் டி.டி.வி தினகரன் விழி பிதுங்கிப் போனார்.

தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வெளியான நிலையில் குற்றாலத்தில் தங்கியிருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏக்களை நேரில் சென்ற சந்திக்க தினகரன் முடிவு செய்தார். உடனடியாக குற்றாலத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. ஆனால் தகுதி நீக்கத்திற்கு ஆளான எம்.எல்.ஏக்களில் பலர் ஒரு நிமிடம் கூட இனி குற்றாலத்தில் இருக்க முடியாது என்று கூறிவிட்டதால் திட்டம் மாற்றப்பட்டது. 

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு இன்று தினகரன் மரியாதை செய்வதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக தினகரன் நேற்று மதுரை வருவதாக இருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஒரு நாள் முன்னதாகவே அதாவது நேற்று முன்தினமே தினகரன் மதுரை வந்து சேர்ந்தார்.

 தினகரன் மதுரைக்கு வருவதற்கு முன்னதாகவே குற்றாலத்தில் இருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் அங்கு வந்திருந்தனர். இதே போல் சிவகங்கையில் இருந்த தங்கதமிழ்செல்வனும் மதுரைக்கு வந்து சேர்ந்தார். தினகரன் மதுரை வந்தால் வழக்கமாக தங்கும் பாப்பிஸ் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். குற்றாலத்தில் இருந்து வந்த எம்.எல்.ஏக்களுக்கு ஆங்காங்கே தங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது. 

நேற்று முன் தினம் இரவு மதுரை வந்தது முதலே தினகரன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கத் தொடங்கினார். தினகரனின் ஆஸ்தான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனும் நேற்று முன்தினம் முதலே அவருடனேயே இருந்து வருகிறார். தினகரன் – தங்கதமிழ்செல்வன் – ராஜா செந்தூர்பாண்டியன் ஆலோசனை விடிய விடிய நடைபெற்றது. காலை ஆறு மணிக்கு பிறகே தினகரன் உறங்கச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் காலை பத்து மணிக்கு ஆலோசனை தொடங்கும் என்று கூறப்பட்டநிலையில் தகுதி நீக்கத்திற்கு ஆளான 16 பேரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர். அவர்கள் அனைவரையும் பாப்பிஸ் ஹோட்டலில் உள்ள ஹாலில் அமர வைத்திருந்தனர். 

தினகரன் காலை 11 மணி அளவில் தான் கூட்ட அரங்கிற்கு வருகை தந்தார். அவரை பார்த்த உடனேயே சிலர் கண் கலங்க ஆரம்பித்துவிட்டனர். தங்கள் எம்.எல்.ஏ பதவி அவ்வளவு தானா? என்று கேட்க அவர்களை முதலில் தினகரன் சமாதானம் செய்தார். உயர்நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது இல்லை நமக்கு உச்சநீதிமன்றத்தில் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று தினகரன் கூறியுள்ளார். அதற்கு அங்கு வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாக மேலும் ஒரு வருடம் ஆகும் என்கிறார்களே என்று சிலர் தெரிவிக்க, அப்படி இல்லை உச்சநீதிமன்றத்தில் வழக்கை விரைவாக விசாரிக்கச் சொல்லலாம் என்று ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். 

மேலும் மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் அதை வைத்து உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை பெற்றுவிடலாம் என்றும் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறினார். ஆனால் அதனை எல்லாம் யாரும் பொருட்படுத்தவே இல்லை. மேலும் இடைத்தேர்தல் வந்தால் கூட தங்களால் போட்டியிட முடியாது என்று சொல்கிறார்கள் என்று கூறி ஒரு தகுதி நீக்க எம்.எல்.ஏ கலங்க அவர் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டியுள்ளது.  

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, தேவையற்ற வதந்தி பரப்பப்படுகிறது என்று தினரகன் கூற அதனையும் யாரும் ஏற்க தயாராக இல்லை. கூட்டம் நடைபெற்ற மூன்று மணி நேரத்தில் சுமார் 2 மணி நேரம் வரை தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் தான் மாறி மாறி புலம்பித் தீர்த்துள்ளனர். இதனால் அவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு கட்டத்தில் தினகரன் விழி பிதுங்கியுள்ளார்.

அப்போது தான் இடைத்தேர்தலை சந்திப்போம் என்று தங்கதமிழ் செல்வன் தனது நிலைப்பாட்டை கூறினார். இதே போல் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட சிலரும் தேர்தலை எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது ஆட்சி அதிகாரம் என அனைத்தும் அவர்கள் பக்கம் இருப்பதால் வேட்பு மனுவை கூட ஏதேனும் காரணம் கூறி நிராகரித்துவிடுவார்கள் என்று ராஜா செந்தூர்பாண்டியன் ஒரு பாய்ன்ட்டை எடுத்துரைத்துள்ளார்.

 

இதனை தொடர்ந்தே வேறு வழியில்லாமல் மேல்முறையீடு செய்ய தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் யாரும் முழு மனதுடன் இந்த முடிவை ஏற்கவில்லை. இதனால் தான் தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்த போது பலர் அவருடன் நிற்காமல் தவிர்த்துள்ளனர். இதே போல் இரவெல்லாம் ஆலோசனை நடத்தி களைப்பில் இருந்த தினகரனும் செய்தியாளர்களை சந்திக்காமல் ரூமுக்கு உறங்கச் சென்றுவிட்டார்.