கொரோனாவைப் பற்றிய புரிதல் இல்லாதவராக முதலமைச்சராக இருக்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

நோய் பாதிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேட்டியளிக்கையில்;- ஏப்ரல் 15ம் தேதியில் 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த தொற்று இன்று 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே சென்னையில் தான் நோய் பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் நோய்த்தொற்று இரட்டிப்பாக்கி வருகிறது. 

வாய்ப்புகள் இருந்த போதும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கொரோனாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 2வது மாநிலமாக தமிழகம் உள்ளது. சென்னையில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் நொறுங்கி விட்டது. மேலும், அரசு அனைத்து குடும் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 நிதியுதவி வழங்கவேண்டும். பட்ஜெட்டில் 2 சதவீதமாக கூட இல்லாத நிதியுதவியை மக்களுக்கு வழங்க முன்வராதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், பேசிய அவர் கொரோனாவைப் பற்றிய புரிதல் இல்லாதவராக முதலமைச்சராக இருக்கிறார். முதல்வர் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார். பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தியும் நோயை கட்டுப்படுத்த தவறுவது ஏன்? தாய்குலத்தின் கோரிக்கையை மதிக்காமல் டாஸ்மாக்கை தமிழக அரசு திறந்தது. லட்சக்கணக்கான மக்களைப் பற்றி கலைப்படாமல் டாஸ்மாக் கடைகளை திறந்தது ஏன் எனவும் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பியுள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததால் தொற்று உயர்ந்தது. தொடக்க முதலே தமிழக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சமூக பரவல் இல்லை என்று கூறி அரசியல் லாபம்  தேட தமிழக முயற்சி செய்கிறது என்று கூறியுள்ளார்.