வீரப்பனின் அண்ணன் மரணத்திற்கு இதான் காரணம்... சீமான் அதிரடி!!
வீரப்பனின் அண்ணன் மாதையன் சிறைக் கொட்டடியிலேயே உயிர்நீத்தது ஏற்கவே முடியாதப் பேரவலமாகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வீரப்பனின் அண்ணன் மாதையன் சிறைக் கொட்டடியிலேயே உயிர்நீத்தது ஏற்கவே முடியாதப் பேரவலமாகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறைக்கொட்டடியில் 35 ஆண்டுகளாக வாடிய வனக்காவலர் ஐயா வீரப்பனின் மூத்தச் சகோதரர் அண்ணன் மாதையன் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். குற்றமற்றவரெனும் போதிலும், கொடும் சூழ்ச்சிக்கு இரையாக்கப்பட்டு, குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, 35 ஆண்டு காலமாகப் பெருந்தண்டனையை அனுபவித்த அண்ணன் மாதையன் சிறைக் கொட்டடியிலேயே உயிர்நீத்தது ஏற்கவே முடியாதப் பேரவலமாகும்.
அவரை விடுவிப்பது குறித்து ஆலோசித்திட வேண்டுமென உயர் நீதிமன்றம் மாநில அரசுக்குப் பரிந்துரைகளைக் கொடுத்தும், அதனை ஏற்காத திராவிடக்கட்சிகளது ஆட்சியதிகாரங்களின் கொடுங்கோல் போக்கே அண்ணன் மாதையனின் உயிரைப் பறித்திருக்கிறது. மேலும், வீரப்பன் கூட்டாளிகள் என்கிற பொய்க்குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்டு, 1993 முதல் 29 ஆண்டுகளாக மைசூரு சிறையில் இருந்த அண்ணன் சைமன் மற்றும் பிலவேந்திரன் ஆகிய இருவரும் பல்வேறு உடல் உபாதைகளால் சிறையிலேயே மரணித்ததைத் தொடர்ந்து, புற்றுநோய் சிகிச்சைக்காக பெங்களூரு சிறையிலிருக்கும் அண்ணன் ஞானபிரகாசையும், உடல்நலக்குறைவால் நலிந்திருக்கும் மைசூரு சிறையிலுள்ள மீசக்கார மாதையனையும் எப்பாடுபட்டாவது காக்க வேண்டியது நமது தார்மீகக் கடமையாகும்.
ஆகவே, வீரப்பன் தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்டு இன்றும் பல்வேறு சிறைகளிலிருக்கும் தமிழர்களை விடுவிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறேன். இத்தோடு, வாழ்நாள் சிறை வாசிகளின் முன்விடுதலைக் கொள்கையில் பாரபட்சம் காட்டாது விடுதலை செய்யவும், பெங்களூரு மற்றும் மைசுரு சிறைகளில் உயிருக்குப் போராடும் கர்நாடக தமிழர்களின் உயிர்காக்கவும் முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.