நடிகர் சூர்யா போல நல்ல கருத்துகளை அனைவரும் பேச வேண்டும் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்கு நருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அகரம் அறக்கட்டளை 40ம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, புதிய தேசிய கல்வி குறித்து விமர்சித்தார். நுழைவுத் தேர்வுகள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், புதிய தேசிய கொள்கையால் அரசுப் பள்ளிகள் மூடும் நிலைக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்தார். புதிய தேசிய கல்வி கொள்கையைப் பற்றி அனைத்து தரப்பினரும் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நடிகர் சூர்யாவின் இந்தக் கருத்துக்கு வழக்கம்போல பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சூர்யா வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுவதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா விமர்சித்தார். கிராமபுறங்களில்  தன்னுடைய படத்தின் டிக்கெட் விலையை சூர்யா குறைத்துக்கொள்வாரா என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பினார். பாஜகவினர் மட்டுமல்லாமல் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் சூர்யாவை விமர்சித்தார். சூர்யா அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுவதாக அவர் பேசினார்.


அதேவேளையில் சூர்யா கருத்துக்கு நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், இயக்கு நர் ப. ரஞ்சித், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் புதிய தேசியக் கல்வி குறித்து தன்னுடைய பேச்சுக்கு எழுந்த விமர்சனங்கள் பற்றியும் தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். ஒரு சாதாரண குடிமகனாக கேள்வி எழுப்பியதாகவும் சூர்யா தெரிவித்தார்.
இந்நிலையில் புதிய தேசிய கல்வி குறித்து சூர்யாவின் கருத்து பற்றி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த, எஸ்.ஏ. சந்திரசேகர், “ நல்ல கருத்துகளை பேசக் கூடாது என்று கூறுகிறார்கள். நாம் சுதந்திர நாட்டில் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம். அதுதான் சூர்யா விஷயத்திலும் நடந்துள்ளது. சூர்யா போன்று நல்ல கருத்துக்களை அனைவரும் பேச வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.