நடிகர் விஜய் எப்போது வருவார் என்ற கேள்விக்கு அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ரஜினியைப் போலவே அரசியலுக்கு எப்போது வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகர்களின் பட்டியலில் விஜய்யும் இருக்கிறார். சமீப காலமாக அவருடைய படங்களில் அரசியல் வசனங்கள் இடம் பிடித்துவிடுகின்றன. அண்மையில் ‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஜய் அரசியல் பேசினார். சுபஸ்ரீ மரணத்தை வைத்து தமிழக அரசை விமர்சித்த விஜய், ‘வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டியவர்களை வைத்திருந்தால் இதுபோன்ற நிலை வராது’ என்று விஜய் பேசியது, அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்தது.
நடிகர் விஜய்க்கு எதிராக தமிழக அமைச்சர்களும் கருத்து தெரிவித்தார்கள். மேலும் ‘பிகில்’ பட இசை விழா நடைபெற்ற கல்லூரிக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது. நடிகர் விஜய் அரசியலுக்கு வர ஆழம் பார்ப்பதற்காகவே அவ்வப்போது அரசியல் பேசுகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவருடைய தந்தையும் இயக்கு நருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம்  நடிகர் விஜய் எப்போது வருவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதில் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “எப்போதாவது எந்த மேடையிலாவது விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாரா? பிறகு ஏன் அவரை தொடர்ந்து காயப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். இன்று ஒரு படம் ஓடிவிட்டால், வருங்கால தமிழகமே என்று போஸ்டர் அடிக்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் விரும்புகிறார். விஜய் அரசியலுக்கு வந்தால், அவரோடு இணைந்து மக்கள் சேவை செய்ய விரும்புகிறார்கள். ஆனால், விஜய் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். தற்போது அவருக்கு 45 வயது ஆகிறது. அவர் என்ன நினைக்கிறார், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை எனக்கு எப்படித் தெரியும். அவர் என்ன செய்வார் என்பதை என்னால் கணிக்க முடியாது” என்று  தெரிவித்துள்ளார்.