ஆந்திராவின் பாகுபலியாக வலம் வரும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணத்தை மையாக வைத்து, சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்க உள்ள ”கம்மா ராஜ்யம்லோ கடப்பா ரெட்லு” படத்தில் நடிகர் அஜ்மல் நடிக்க உள்ளதாக அறிவிப்புவெளியாகியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்த பின் நடைபெற்ற 2வது தேர்தலிலேயே, பிரம்மாண்ட வெற்றி பெற்று ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அரியணையில் அமர்ந்தார். 5 துணை முதலமைச்சர்களை தம்முடன் பதவியேற்க வைத்து அதிரடி காட்டியது,  விவசாயிகளுக்கு 9 மணி நேர இலவச மின்சாரம், பொறியியல் மாணவர்களுக்கு இலவச கல்வி கட்டணம் என இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களையும் ஆச்சரியத்துடன் ஆந்திராவை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார் ஜெகன்.பல்வேறு நலத்திட்டங்கள் மட்டுமல்லாது, மக்களுக்கு அணுகுவதற்கும் சுலபமான முதலமைச்சர் என்பதால் ஆந்திர மக்கள் ஜெகனை தங்கள் வீட்டு பிள்ளை என கொண்டாடினர். 

இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பிரவேசத்தை படமாக இயக்க உள்ளதாக இயக்குநர் ராம்கோபால் வர்மா திடீரென அறிவிப்பு வெளியிட்டார். சன்னி லியோனில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வரை சர்ச்சை கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவிட்டு, பலரையும் பதறவைத்தவர் ராம்கோபால் வர்மா என்பது எல்லோருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாமல் என்.டி.ஆரின் இரண்டாவது மனைவியை மையமாக வைத்து இவர் இயக்கிய ’லட்சுமி என்.டி.ஆர்’ திரைப்படத்தை ஆந்திராவில் வெளியிட தடை விதிக்கும் அளவிற்கு அதில் சர்ச்சைகள் கிளம்பின. ஆனாலும் அடங்காத சர்ச்சை நாயகனான ராம்கோபால் வர்மா ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை தற்போது படமாக்க முடிவு செய்ததுள்ளது ஆந்திரத்தில் புயலை கிளப்பியது. 

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் படத்தை எடுத்தே தீருவேன் என அவர் அடம்பிடித்துவருகிறார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஆந்திர மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  இந்நிலையில் ”கம்மா ராஜ்யம்லோ கடப்பா ரெட்டிலு” படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்கப் போவது அஜ்மல் என  தகவல் வெளியாகியுள்ளது. ஜெகன் படம் உருவாகும் போது அதில் தங்களைப் பற்றிய பாத்திரங்களை படமாக்க கூடாது என ஜெகனின் நட்பு வட்டாரங்கள் அதிரடி காட்டியுள்ளனர். இவற்றையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாத சர்ச்சை நாயகன் ராம்கோபால் ”கம்மா ராஜ்யம்லோ கடப்பா ரெட்லு” 

படத்தின் டிரெய்லர் தீபாவளிக்கே வெளியாகும் என அறிவித்து, ஆந்திர திரையுலகை மட்டுமல்லாது ஆந்திர கேபினேட்டையே அதிர வைத்துள்ளார். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்ற கதாநாயகன் அஜ்மல், ஜெகனாக தான் வேடம் ஏற்று நடிக்க உள்ளது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிவருகிறார்.