அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், தங்கர்பச்சான், கவுதமன், கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வரும் இந்த வேளையில் ஐபிஎல் தேவையில்லை என்ற கருத்தை முன் வைத்து பலர் போராடி வருகின்றனர். தமிழர் வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்த் தேசிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணா சாலையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அண்ணாசாலை, வாலாஜா சாலை, சேப்பாக்கம் சுற்றிலும் போராட்டக்களமாகவே காணப்படுகிறது.

இந்த போராட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா, சீமான், தங்கர்பச்சான், ராம், வெற்றிமாறன், வைரமுத்து ஆகியோர் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கொல்கத்தா அணியினர் ஓட்டலில் இருந்து மைதானத்துக்கு வந்ததனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களைப்பதற்காக போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் பாரதிராஜா, சீமான், தங்கர்பச்சான், ராம், வெற்றிமாறன், கவுதமன், வி.சேகர், கருணான், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.