dindigul seenivasan expell from minister told ttv dinakaran

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவித்தும், அசிங்கப்படுத்தியும் பேசியுள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை உடனடியாக பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக் கூட்ட மேடைகளில் பேசும்போது எதையாவது உளறிக்கொட்டி சிக்கலில் மாட்டிக் கொள்வார். பின்னர் அதற்கு அவர் ஒரு நீண்ட விளக்கமும் அளிப்பார்.

ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் பொய் சொன்னோம் என ஒரு முறை பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திண்டுக்கல் அருகே பொதுக் கூட்டத்தில் பேசும்போது, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி.தினகரன் திருடி தற்போது கட்சி நடத்துகிறார் என பேசி அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.

அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஆதாயம் பெற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அவரை தாய் என்றும் தெய்வம் என்றும் புகழ்ந்து பேசி, இன்று அவர்கள் இல்லாத நிலையில், அவர் புகழை சொச்சைப்படுத்தி பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

அம்மாவின் புகழுக்கு களங்கப் ஏற்படுத்திய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை உடனடியாக பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொடியவர்களின் கொட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் டி.டி.வி.தினரன் குறிப்பிட்டுள்ளார்.