Dinakaran warning to his relative divakaran

எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தவர் தான் இந்த திவாகரன், சசிகலாவையும் அவர் இதுவரை ஜெயிலுக்கு சென்று பார்க்கவில்லை என தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சசிகலா அக்காள் மகன் தினகரனுக்கும் தம்பி திவாகரனுக்கும் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் அரசியல் சண்டை அதிகரித்துவந்த நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திவாகரன், “தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் நாங்கள் இல்லை; அதிமுக அம்மா அணியில்தான் இருக்கிறோம். தமிழகத்தில் தேர்தல் நடந்தால், தேவைப்படும் பட்சத்தில் தனித்துப் போட்டியிடுவோம். பங்கு கேட்பார்கள் என்ற பயத்தில், அதிமுக என்ற சுவடே இருக்கக் கூடாது எனத் தினகரன் முயற்சிக்கிறார் என தாறுமாக விமர்சனத்தை அடுக்கினார்.

இதற்க்கு பதிலளிக்கும் வகையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடியில் அண்ணா இல்லை என்று காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார் திவாகரன். சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது திவாகரன் காட்டுகிறார்.

சசிகலாவைப் பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்குத் தெரியும். சசிகலாவை பெங்களூரு சிறைக்குச் சென்று பார்க்காதவர் திவாகரன். சசிகலாவின் சகோதரர் என்பதைத் தாண்டி கட்சிக்கும் திவாகரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உறவு என்பது வேறு, கட்சி என்பது வேறு, கட்சியைத் தனிநபராக ஆட்டிப்படைக்க நினைக்கிறார் திவாகரன். எம்.ஜி.ஆருக்கு எதிராக அரசியல் செய்த அவர், எஸ்.டி.எஸ் தனிக்கட்சி தொடங்கியபோது இணைந்து பணியாற்றியவர் குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்கிறேன், அதற்காக அவர்களுக்குக் கட்டுப்பட முடியாது. குடும்ப உறவைக் கடந்து, அரசியல் உறவு திவாகரனுடன் கிடையாது என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய தினகரன், “கர்நாடகத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் யுவராஜ் , கர்நாடகத் தேவைக்குப் போக மீதமுள்ள நீரைத்தான் தமிழகத்துக்கு வழங்குவோம் என்று கூறுகிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. தமிழகம் முழுவதும் மத்திய அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தும்போது அதிமுகவினர் மட்டும் வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.