dinakaran warning palanisamy lead tamilnadu government

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவதற்காக தமிழக அரசு உடனடியாக அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், சமமான படிப்பு - சமமான வேலை. ஆனால் ஊதியத்தில் முரண்பாடு என்பது உடனடியாக களையப்படவேண்டிய ஒன்று. இந்த கோரிக்கையை முன்வைத்து தான் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற முழக்கத்தோடு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள் எதுவாயினும் அதன் நியாயத்தை செவி கொடுத்து கேட்காமலும், சீர்படுத்த முயற்சிக்காமலும் அலட்சியப் போக்கோடு நடந்துகொள்வதால்தான் போராட்டக் களத்திற்கு வேறு வழியின்றி மக்கள் தள்ளப்படுகிறார்கள்.

அனைத்து தரப்பு மக்களையும் போராட்ட மனநிலைக்கு கொண்டுவந்ததற்காக தமிழக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமானது பல கட்டங்களாக தமிழகத்தில் நடந்து, அவ்வப்போது சில வாக்குறுதிகள் மட்டும் அரசு தரப்பில் அதிகாரிகள் மூலமாக வழங்கப்படுகிறது. ஆனால் அந்த வாக்குறுதிகள் எவ்வித செயல்முறைக்கும் வராத காரணத்தால் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகளுடன் குடும்பத்தினரும் போராட்டக் களத்தில் இருக்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்னையின் தீவிரத்தை கருத்தில்கொண்டு உடனடியாக அமைச்சர்கள் அளவில் பேச்சுவார்த்தைக்கு அவர்களை அழைத்து, ஊதிய முரண்பாட்டை களைவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அலட்சியப்போக்கோடு நடந்துகொள்வதென்பது கண்டிக்கத்தக்கது.

ஆசிரியர்களை கொந்தளிக்கும் மனநிலையில் வைத்திருப்பது சமூகத்திற்கு உகந்ததல்ல என்பதை கருத்தில்கொண்டு போராட்டக்களம் வரை யாரையும் தள்ளாத வகையில் உடனடியாக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.