dinakaran warning edappadi to retrieve double leaves

திகார் சிறையில் இருந்த தினகரன் ஜாமினில் வெளி வந்ததை அடுத்து, அமைதியாக இருந்த அதிமுகவில், புயல் மையம் கொண்டுள்ளது.

சிறையில் இருந்த காலத்தில் கட்சி மற்றும் ஆட்சியில் முன்னேற்ற நடவடிக்கை எதுவும் இல்லாததால், தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார் தினகரன்.

சிறை செல்வதற்கு முன் ஒதுங்கி இருப்பதாக கூறிய தினகரன், தற்போது தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தது, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும், தமது ஆதரவாளர்கள் 7 பேருக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள் சிலரை நீக்கவேண்டும் என்று முதல்வருக்கு தினகரன் நிர்பந்தம் கொடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று தமது ஆதரவு எம்.எல்.ஏ க்கள் 11 பேருடன் பெங்களூரு சென்று, சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன், அவருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது, இன்னும் இரண்டு மாதத்திற்கு ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒதுங்கி இருக்குமாறும், அதன் பிறகு மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என்று சசிகலா கூறியதாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னர், இன்னும் இரண்டு மாதங்கள் ஒதுங்கி இருப்பதாகவும், அதற்குள், அணிகள் இணைப்பு, சின்னம் மீட்பு ஆகியவற்றை, எடப்பாடி தரப்பு செய்து முடிகிறதா? என்று பார்ப்போம். இல்லையெனில், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்குவோம் என்று தினகரன் கூறி உள்ளார்.

ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கூடி விவாதித்த அமைச்சர்கள் குழு, தினகரனை கட்சிக்குள் அனுமத்திக்க கூடாது என்று, ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தது.

இந்நிலையில், தமக்கான ஆதரவு எம்.எல்.ஏ க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் நடவடிக்கையிலும் தினகரன் தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதற்காக, முதல்வர் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ க்களை, தம் பக்கம் இழுப்பதற்கான பணிகளையும், தினகரன் முடுக்கி விட்டுள்ளார்.

மறுபக்கம், பன்னீர் அணி அதிமுகவுடன் இணைந்தால், இரட்டை இலை சின்னத்தையும் சிக்கல் இன்றி மீட்க முடியும், தினகரனையும் கட்சியில் இருந்து ஓரம் கட்ட முடியும் என்று, அதற்கான முயற்சியில், எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் குழு தீவிரமாக களமிறங்கி உள்ளது.

இதனால், அதிமுகவில் இனி அடுத்தடுத்து, பல்வேறு அதிரடி காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.