dinakaran supporters raising slogans
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ராணி மேரி கல்லூரியில் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 4 சுற்றுகளின் முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 10626 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகிப்பதால், தினகரன் வெற்றியை நெருங்கிவிட்டார் என்றே கூற வேண்டும்.
இதற்கிடையே தனது ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வனுடன் தினகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இரட்டை இலை எம்ஜிஆரிடமோ ஜெயலலிதாவிடமோதான் இருக்க வேண்டுமே தவிர நம்பியாரிடம் இருக்கக் கூடாது. வேட்பாளரை பொறுத்துத்தான் சின்னத்திற்கான ஆதரவு. ஜெயலலிதாவிற்கு பிறகு அந்த தொகுதியில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்களே தெரிவித்துவிட்டனர். தமிழக மக்களின் எண்ணங்களை ஆர்.கே.நகர் வாக்காளர்கள் பிரதிபலித்துள்ளனர் என தினகரன் தெரிவித்தார்.
இதற்கிடையே தினகரனை சுற்றி நின்ற தினகரனின் ஆதரவாளர்கள், வாழும் எம்ஜிஆரே.. வருங்கால முதல்வரே.. என்றெல்லாம் கோஷங்களை எழுப்பினர். தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை தடுத்தும் கூட கோஷங்கள் ஓங்கி ஒலித்தன. பின்னர் பேட்டி முடிந்தவுடன் அமைதி காக்குமாறு தினகரனும் கூறினார். இதையடுத்து பேட்டி முடிந்தவுடன் ஆதரவாளர்கள் அமைதியாகினர்.
