dinakaran supporters arrested in rk nagar

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரில் தினகரனின் ஆதரவாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 24ம் தேதி நடைபெற்றது. அதில், 40707 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் வெற்றி பெற்றார். 

ஆர்.கே.நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்தமுறை பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும்கூட பணப்பட்டுவாடா நடந்ததாக திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. அதிமுகவும் தினகரனும் போட்டி போட்டுக்கொண்டு பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன.

அதிலும், தினகரன் தரப்பில் நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன. அதாவது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் நோட்டுகளை வழங்கிவிட்டு அவர்களின் மொபைல் எண்களை வாங்கியதாகவும் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால், 20 ரூபாய் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு 10000 ரூபாய் தருவதாக கூறப்பட்டதாக பேச்சுகள் அடிபட்டன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்து தினகரன் வெற்றி பெற்ற நிலையில், டோக்கன் வழங்கியதாக கூறப்படும் 6 பேரிடம் பணம் கேட்டு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தண்டையார்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தினகரனின் ஆதரவாளர்களான ஜான் பீட்டர், செல்வம், சரண்ராஜ், ரவி ஆகிய 4 பேரை ஆர்.கே.நகரில் போலீசார் கைது செய்துள்ளனர். 450 பேருக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான குறிப்புகளை அவர்களிடமிருந்து கைப்பற்றி, போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.