வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளது.

இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்படும் என தினகரன் கூறிவருகிறார். மேலும், தனக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கும் 18 எம்.எல்.ஏக்கள் அல்லாமல், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பழனிசாமிக்கு ஆதரவாக ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர்கள் வெளிவருவர் எனவும் தினகரன் தெரிவித்து வருகிறார்.

தினகரன் கூறியபடியே ஒவ்வொரு ஸ்லீப்பர் செல்லாக வெளிவருகிறார்களே என எண்ண தோன்றுகிறது. பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இது தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் சந்திப்பாகவே பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவைத் தொடர்ந்து மேலும் பல எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், தற்போது இருப்பவர்களும் தினகரன் அணிக்கு தாவுவது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களையும் கலக்கமடைய வைத்துள்ளது.