கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜக்கையன், அதிமுக அம்மா அணியின் அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக பல அணிகளாக சிதறியது. பின்னர், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகளாக இணைந்தது. இந்த இணைப்புக்கு பிறகு, துணை முதல்வர் பதவி ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பின்போது பொது செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் எதிரப்பு தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை அவர்கள் வாபஸ் பெறுவதாக கூறி ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பதவியில் இருந்து எடப்பாடி ஆதரவு அதிமுக பிரமுகர்களை நீக்கம் செய்தார். மேலும் ஆதரவாளர்களை அப்பதவியில் நியமித்தும் வந்தார்.

எடப்பாடி பழனிசாமியை, சேலம் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் டிடிவி தினகரன் அதிரடியாக நீக்கம் செய்தார்.

இந்த நிலையில், டிடிவிக்கு ஆதரவு அளித்து வந்த கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜக்கையன், கடந்த சில தினங்களுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதனையடுத்து அதிமுக அம்மா அணியின் அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ. ஜக்கையனை நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.