நீட் தேர்வுக்கு எதிராக திமுக அழைப்பு விடுத்துள்ள ஆலோசனைக் கூட்டத்தில், தனது ஆதரவாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு, மருத்துவ படிப்பில் சேரமுடியாத விரக்தியில் அரியலூரைச் சேர்ந்த அனிதா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அனிதாவின் உடல், அவரது சொந்த ஊரான குழுமூர் கிராமத்தில் நேற்று எரிக்கப்பட்டது. அவரது உடலுக்கு திமுக செய்ல தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை, அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றுக்கு திமுக ஏற்பாடு செய்துள்ளது. 

நீட் தேர்வுக்கு எதிராக திமுக அழைப்பு விடுத்துள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதில் தினகரன் ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், அனிதாவின் மரணத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார்.

திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என்ற செய்தி வெளியான நிலையில், திமுக கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று டிடிவி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில், கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் டிடிவி தினகரன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கூறினார்.