சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 6 நாட்கள் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது, பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அந்த சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சோதனையின் பின்னணியில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் துரோகம் இருப்பதாகவும் அதற்காக அவர்கள் தொண்டர்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் எனவும் சோதனையில் அரசியல் சதி இருப்பதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், திருச்செந்தூரில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்ட தினகரன் பின்னர், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, வருமான வரி சோதனையில் அரசியல் சதி இருக்கிறது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் நான் மட்டும் கூறவில்லை. மற்ற கட்சியினரும் கூறுகின்றனர். இந்த சோதனைகளுக்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல.

கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பே தவிர திமுகவுடன் கைகோர்ப்பதற்கான சந்திப்பு அல்ல.

ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக உள்ளனர். மேலும் பழனிசாமி அணியில் மேலும் 20 ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள். இந்த தகவல் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் காதுகளுக்கு சென்றிருக்கும். அதனால்தான் வருமான வரித்துறை ஏவப்பட்டிருக்கிறது. 

இதுபோன்ற சோதனைகளை நடத்தினால், எம்.எல்.ஏக்கள் பயந்துகொண்டு அமைதியாக இருப்பார்கள் என்பதற்கான அரசியல் சதிதான் இது. ஆனால் இந்த சதியை எல்லாம் முறியடித்துவிட்டு பழனிசாமி ஆட்சியை கவிழ்த்து வீட்டிற்கு அனுப்பிவிட்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும். 

ஸ்லீப்பர் செல்கள் வெளியில் வர வேண்டிய நேரத்தில் வருவார்கள். அப்போது பழனிசாமியின் ஆட்சி கவிழ்க்கப்படும் என தினகரன் தெரிவித்தார்.

சர்க்கரை விலை உயர்வு, உளுத்தம் பருப்பு கிடையாது.. இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் ரேஷன் கடைகளே இருக்காது எனவும் தினகரன் விமர்சித்தார்.