திமுக தலைவர் கருணாநிதியை தனக்கு மட்டுமல்லாமல் ஜெயலலிதாவிற்கும் கூட பிடிக்கும் என கூறியுள்ள தினகரன், கருணாதியிடம் ஜெயலலிதாவிற்கு பிடிக்காத குணம் என்னவென்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். இருவரும் பரஸ்பரம் விமர்சித்து கொண்டவர்கள். வெற்றி, தோல்வியையும் மாறி மாறி கண்டவர்கள். தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த இருவரும் இல்லாத தமிழக அரசியலில் தற்போது பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தினகரன், எனக்கு திமுக தலைவர் கருணாநிதியை மிகவும் பிடிக்கும். மிகவும் திறமை வாய்ந்தவர் கருணாநிதி. எவ்வளவு பெரிய தோல்வியை கண்டாலும், அதிலிருந்து மீண்டு மீண்டும் வெல்லும் திறமையும் மனவலிமையும் பெற்றவர் கருணாநிதி. அந்த விதத்தில் அவரது திறமைக்காக அவரை மிகவும் பிடிக்கும்.

ஜெயலலிதாவிற்கே கருணாநிதியை பிடிக்கும். கருணாநிதியின் பழிவாங்கும் குணம் மட்டும்தான் ஜெயலலிதாவிற்கு பிடிக்காது. அரசியலைக் கடந்து கருணாநிதியை ஜெயலலிதாவிற்கு பிடிக்கும் என தினகரன் தெரிவித்தார்.