dinakaran questioned tamilnadu government
முதல்வர் பழனிசாமி தலைமையிலான பழனிசாமி அரசுக்கு எதிர்க்கட்சியான திமுகவைவிட சிம்மசொப்பனமாக திகழ்வது தினகரன் தான்.
ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியான அதிமுகவை வீழ்த்தியதில் தொடங்கி, ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியை அறுவடை செய்வதுவரை திமுக செய்ய வேண்டிய பணிகளை செவ்வனே செய்துவருகிறார் தினகரன்.

பெரும்பான்மை இல்லாத முதல்வர் பழனிசாமியின் அரசு நீடிப்பதற்கு, மத்திய பாஜக அரசுதான் காரணம் என்ற விமர்சனம், திமுக, தினகரன் மட்டுமல்லாமல் அரசியல் நோக்கர்களாலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்சியாளர்களின் விளக்கத்தை காதில் போட்டுக்கொள்ளாத திமுக, தினகரன் அணி ஆகிய எதிர் தரப்புகள், மத்திய அரசின் கைக்கூலி, அடிமை என்றெல்லாம் பழனிசாமி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் அமைச்சர்கள் அந்த விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவித்துவருகின்றனர்.
இப்படியான சூழலில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தினகரன், தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசை நோக்கி கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஓ.என்.ஜி.சி செயல்படுத்தும் திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால் அவரது பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள், மத்திய அரசு செயல்படுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பதில்லை. மாறாக கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.

பழனிசாமி அரசு, மத்திய அரசின் கைக்கூலியாக இல்லாமல் இருந்தால், ஓ.என்.ஜி.சி பணிகளுக்கு தடை விதித்திருக்க வேண்டுமே தவிர, அதை எதிர்த்து போராடியவர்களை கைது செய்திருக்க கூடாது என தினகரன் கடுமையாக சாடினார்.

திருவாரூர் மாவட்டம் கடம்பங்குடியில் ஓ.என்.ஜி.சி ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு எதிராக போராடிய மாணவர்கள் உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதை சுட்டிக்காட்டித்தான் தினகரன் பேசியிருக்கிறார்.
