கட்சி மற்றும் ஆட்சியில் சசிகலா குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து, மனைவி-மச்சானுடன் தமது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்ட திட்டமிட்டு வருகிறார் தினகரன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் மட்டும் ஜெயித்து விட்டால், இந்த திட்டம் உடனடியாக நிறைவேறும் என்கின்றனர் அதிமுகவினர்.

சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் தினகரன். அவர் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை மணந்துள்ளார்.

அனுராதாவின் சகோதரர்தான் டாக்டர் வெங்கடேஷ். அதாவது தினகரனின் மைத்துனர்.

சசிகலா சிறைக்கு செல்லும் தருவாயில், துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர், மற்ற உறவுகள் அனைத்தையும் ஓரம்கட்டி, தமது மனைவி மற்றும் மச்சானுக்கு மட்டுமே முழு அதிகாரத்தையும் கொடுத்துள்ளார் தினகரன்.

தினகரன் மீது உள்ள கோபத்தால், குடும்ப உறவுகள் அனைவரும் ஒதுங்கிக்கொள்ள, மச்சான் தினகரனுக்காக, ஆர்.கே.நகரில் முழு மூச்சாக வேலை பார்த்து வருபவர் டாக்டர் வெங்கடேஷ் மட்டுமே.

தற்போது சிறையில் இருக்கும் சசிகலா வெளியில் வர 4 ஆண்டுகள் ஆகும். மேலும், அப்படி வருவதற்குள் கட்சியை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே தினகரன் திட்டம்.

அதற்காகவே, அவர் குடும்ப உறவுகளின் எதிர்ப்பையும் மீறி, ஆர்.கே.நகரில் களமிறங்கி உள்ளார். பணத்தை அள்ளி வீசி எப்படியும் ஜெயித்து விடலாம் என்று அவர் எண்ணுகிறார்.

அப்படி வெற்றி பெற்று விட்டால், உறவுகள் அனைத்தையும் சமாளிக்க முடியாது என்பதால், தமக்கு நெருக்கமான உறவுகளான, மனைவி மற்றும் மச்சானுக்கு மட்டும் பொறுப்புகளை வழங்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, மனைவி அனுராதாவுக்கு, மீண்டும் ஜெயா டி.வி யின் நிர்வாக பொறுப்பும், மச்சான் டாக்டர் வெங்கடேஷுக்கு, இளைஞர் அணி அல்லது இளம்பெண்கள் பாசறை பொறுப்பு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

ஆக, அதிமுக சசிகலா குடும்ப ஆதிக்கத்தில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை அகற்றி, மனைவி மற்றும் மச்சான் துணையுடன், தமது குடும்ப சொத்தாக மாற்ற துடிக்கிறார் தினகரன் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.

எல்லாம் சரி, முதலில் அவர் ஆர்.கே.நகரில் ஜெயிக்க வேண்டும். அடுத்து சசிகலா அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்கின்றன அதிருப்தியில் உள்ள மற்ற சசிகலா உறவுகள்.