கொங்கு மாவட்டத்தில் ஒன்றான திருப்பூர் நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தது தினகரன் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தினகரன் கட்சியில் தினமும் பல்வேறு நிர்வாகிகள் வெளியேறி வருவதால் தினகரன் கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து நாளுக்கு நாள், அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். அதிலும் செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் போன்ற தினகரனின் தளபதிகளே கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.  

இந்நிலையில் சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் பழனியப்பன் தனது குடும்ப நிகழ்ச்சிக்கு திமுக, அதிமுக முக்கிய புள்ளிகள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து விருந்து கொடுத்து சிறப்பாக கவனித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் திமுக அல்லது அதிமுக கட்சிக்கு சீக்கிரம் தாவி விடுவார் என்று தினகரன் தரப்பு கலங்கிக்கொண்டிருக்கிறது.  தினங்களுக்கு முன்பு தினகரன் பழனியப்பனை அழைத்து பேசியதாக சொல்லப்படுகிறது.  தினகரனுக்கு மனசை குளிரவைக்கும் பதில் சொன்னாலும்,  ஆனாலும் தினகரன் தரப்பில் இருந்து பழனியப்பனை கண்காணிக்கும் படி கூறியுள்ளதாக கூறுகின்றனர்.  

இது ஒரு பக்கம் போய் கொண்டிருக்க அமமுக-வின் மாநில தேர்தல் பிரிவு இணை செயலாளர் திருப்பூர் C.சிவசாமியின் ஏற்பாட்டின் பேரில் 275 நிர்வாகிகள் உட்பட 500 பேர்  அக்கட்சியிலிருந்து விலகி ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உடன் இருந்தார். கொங்கு மாவட்டத்தில் ஒன்றான திருப்பூர் நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தது தினகரன் தரப்புக்கு பலத்த அடியாக விழுந்துள்ளது.