dinakaran party cadres threaten ops team girl
ஆர்.கே.நகர் இடை தேர்தலில் திமுக, அதிமுகவின் 3 அணிகள், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக மற்றும் சுயேட்சைகள் என 62 பேர் போட்டியிடுகின்றனர்.
தற்போது அதிமுகவின் முக்கிய எதிர்க்கட்சி என திமுகவை கூறினாலும், சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கே மோதல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு பகுதியில் பிரச்சாரம் செய்யும்போதும், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனன், டி.டி.வி.தினகரன் பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார். அடியாட்களை வைத்து மிரட்டுகிறார் என குற்றஞ்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் ஓ.பி.எஸ். பிரிவு மகளிரணியை சேர்ந்த சுஜாதா மற்றும் சிலர், மகாராணி அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது, அங்கு ஒரு கார் வந்தது. அதில், வந்த சிலர், அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

உடனே வெளியே சென்ற அவர்கள், வேட்பாளர் மதுசூதனன் வீட்டுக்கு சென்றனர். அங்கு தங்களை சிலர் மிரட்டியதாக கூறினர். உடனே மதுசூதனன் மற்றும் சிலர், அந்த பகுதிக்கு சென்றனர். ஆனால், காரில் வந்த கும்பல் சென்றுவிட்டது.
இதுகுறித்து சுஜாதா கூறுகையில், பிரச்சாரத்துக்கு சென்ற நாங்கள், சாப்பிடுவதற்காக ஓட்டலுக்கு சென்றோம். அப்போது காரில் வந்த உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர், எங்களிடம் பேச்சு கொடுத்தனர்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக வேலை செய்ய கூடாது. இதே தொகுதியில் டி.டி.வி.தினகரன், போட்டியிடுகிறார். அவருக்குதான் நீங்கள் வேலை செய்யவேண்டும். எப்படியும் மதுசூதனன் தோற்க போகிறார். அதன்பிறகு, உங்கள் நிலைமையை யோசித்து பாருங்கள். இது அறிவுரை இல்லை. எச்சரிக்கை என கூறினார்கள்.

இதனால், பயந்துபோன நாங்கள், உடனே வெளியேறி, மதுசூதனனிடம் கூறினோம். அவரும் இங்கு வந்தார். அதற்குள், எங்களை மிரட்டிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சென்றுவிட்டார்.
எங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு டி.டி.வி.தினகரன்தான் காரணம். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்க போகிறோம் என்றார்.
