dinakaran opinion about assembly predecessor post gave to ops

அமைச்சர் செங்கோட்டையனின் முக்கியத்துவத்தை குறைக்கும் நோக்கில்தான், அவரிடம் இருந்த அவை முன்னவர் பதவியை மீண்டும் பன்னீர்செல்வத்திற்கே வழங்கப்பட்டுள்ளது என தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவால் அவை முன்னவராக நியமிக்கப்பட்டவர் பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி பன்னீர்செல்வம் வெளியேறினார். இதையடுத்து அவரிடம் இருந்த நிதித்துறை, ஜெயக்குமாரிடம் வழங்கப்பட்டது. அதேபோல், அவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். 

முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபிறகு, துணை முதல்வராக பதவியேற்ற பன்னீர்செல்வத்திடம் அவர் ஏற்கனவே கவனித்து வந்த நிதித்துறை ஒப்படைக்கப்பட்டது. அதேபோல, செங்கோட்டையனிடம் இருந்து அவை முன்னவர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் பன்னீர்செல்வத்திடமே வழங்கப்பட்டது. பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மற்ற மூத்த அமைச்சர்கள் எல்லாம் சசிகலாவிற்கும் தினகரனுக்கும் எதிராக அதிரடியான விமர்சனங்களையும் கருத்துகளையும் முன்வைத்து வரும் நிலையில், செங்கோட்டையன் அதுபோன்ற கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதில்லை. 

மேலும், அவர் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரிடம் இருந்து அவை முன்னவர் பதவியை பறித்து பன்னீர்செல்வத்திடம் கொடுத்ததாகவே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதையேதான் தினகரன் தரப்பும் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே கருத்து தெரிவித்த தினகரன், ஒரு துரோகி மற்றொரு துரோகிக்கு பதவி கொடுத்துள்ளார் என விமர்சித்தார்.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரனிடம் இதுதொடர்பான கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தினகரன், நான் ஏற்கனவே கூறியதுபோல ஒரு துரோகி மற்றொரு துரோகிக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கிறார். செங்கோட்டையனின் முக்கியத்துவத்தை குறைத்து ஓரங்கட்டும் நோக்கில் பன்னீர்செல்வத்திற்கு அவை முன்னவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.