அமமுக பொதுச் செயலாளர் தினகரன், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2018 பிப்ரவரி மாதம் அமமுக ஆரம்பித்த தினகரன், தற்போது அதனை பதிவு செய்யும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நிரந்த சின்னம் கிடைக்காததால் வேலூர் மக்களவைத் தேர்தல்  மற்றும் தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் என எதிலும் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்பட்டது அனால் ஒரு சிலரோ சிறையிலிருக்கும் சசிகலா இப்போதைக்கு திமுகவோடு போட்டி என தேர்தல் களம் வேண்டாம் என சொன்னதால் சைலண்ட்டாக இருப்பதாக தெரிகிறது, 

இந்நிலையில்தான் மக்களிடமிருந்து அ.ம.மு.கவுக்கு இடைவெளி ஏற்படாமல் தவிர்க்க ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் தினகரனும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆந்திர முதல்வராக இருந்த மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த ஜெகன் மோகன் ரெட்டி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக "பிரஜா சங்கல்ப யாத்ரா" என்ற பெயரில் ஆந்திர முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார், பிறகு நடந்த தேர்தலில் 151 இடங்களில் பிரமாண்ட வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தார்.

அதே பாணியில் நாள் ஒன்றுக்கு 20-25 கி.மீ வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ள தினகரன், பொதுமக்களை சந்தித்து ஆட்சிக்கு எதிராக பேசவுள்ளார். ஆட்சிக்கு வரும்போது அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை சொல்லி, ஜெயலலிதா ஸ்டைலில் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா ? என கேட்டதைப்போல, ‘சொன்னார்களே, செய்தார்களா? அவர்கள் செய்தார்களா? என்று மக்களிடமே கேள்வி எழுப்பவுள்ளாராம். தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் இந்த பயணத்தை விரிவுபடுத்துவதற்காக ரகசியமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். ஒரு நாட்களுக்கு முன்பாக எந்த ஊரு, இடம் உள்ளிட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கே தினகரன் சொல்வாராம்.

மக்களவைத் தேர்தலில் அமமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியையடுத்து, அமமுக நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு வெளியேறி மாற்றுக் கட்சிகளில் அடைக்கலமாகி வருகின்றனர்.  அமமுகவிலிருந்து மாற்றுக் கட்சிக்குச் செல்லும் முடிவில் இருக்கும் நிர்வாகிகளை சமாதானப்படுத்தவும், ஆட்சிக்கு எதிராக பேசுவதன் மூலம் அமமுக-அதிமுக இணைப்பு நிகழாது என்று சொல்வதற்காகவும் இந்த பயணத்தை பயன்படுத்தவும், சிறையிலிருக்கும் சசிகலா வெளியே வருவதற்குள் ஒரு ரவுண்டு அடித்துவிட வேண்டும் என்ற பிளானில் இருக்கிறாராம்.