கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி துணை முதலமைச்சர் ஓபிஎஸ்  தினகரனை சந்தித்து ஆட்சியமைக்க ஆதரவு கோரியதாக டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் அளித்த பேட்டி தமிழக அரசியலில் புதிய பூகம்பத்தை ஏற்படுத்தியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு, இருவரும் இணைந்து நல்லாட்சி வழங்கலாம் என்று தினகரனிடம் பன்னீர்செல்வம் கூறியதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சூழ்நிலையில்  டிடிவி தினகரன் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2017 ஜூலை 12ல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோளின்படி அவரை சந்தித்தேன். அவர் என்னை சந்தித்தது உண்மை. தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் தெரிவித்ததாக கூறினார். 

என்னை சந்தித்ததை பன்னீர்செல்வம் மறுக்க மாட்டார். மறுக்க முடியாத அளவிற்கு ரகசியங்கள் உள்ளது என ட்விஸ்ட் வைத்தார். மேலும் கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் தன்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்றும்,  ஆனால் தான் மீண்டும்  பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்துடன் இணைவது தற்கொலைக்கு சமம் என்றும் கூறினார்.

இந்நிலையில் தினகரனின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், துணைமுதல்மைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசிவருகிறார்.

அப்போது பேசிய அவர், எந்த காலத்திலும் தினகரானால் ஆட்சியை கைப்பற்ற முடியாது. குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணமும் தனக்கு இல்லை.

கட்சியை பொறுத்தவை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும், இணைத்தே முடுவு எடுப்பதாகவும், ஆனால் தரக்குறைவான அரசியல் தினகரன் செய்வார் என எதிர்பார்க்கவில்லை. பொய்க்கு மேல் பொய் சொல்லி வருகிறார் தினகரன் என கூறினார்.

தான் உண்மையாக இருந்ததால் மட்டுமே அம்மா தனக்கு இந்த பதவியை கொடுத்ததாகவும். இல்லையென்றால் என்னை அம்மா தேர்வு செய்திருக்க மாட்டார் என அதிரடியாக கூறினார். அதே போல் அரசியல் நாகரீகம் தெரியாத அநாகரீகமானவர் என்றும் துணைமுதல்மைச்சர் டிடிவி தினகரனை விமர்சித்தார்.