தேர்தலில் தான் வெற்றி பெற்று அதிகார மையமாவதற்காக உழைப்பது ஒரு வகை அரசியல்! வலிமையான ஒருவரின் வெற்றிக்காக பாடுபட்டு, அவர் அதிகார மையமானதும் அந்த நிழலில் இளைப்பாறுவது மற்றொரு வகை அரசியல். இதில் இரண்டாவதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் தமிழருவி மணியன் என்கிறார்கள்.

ரஜினிக்காக பட்டி தொட்டியெங்கும் கரையாய் கரைந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் தமிழருவி, ஆன் தி வேயில் தினகரனை போட்டுப் பொளக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் தினகரனை பற்றி திருவாய் மலர்ந்திருக்கும் தமிழருவி...

“ஆர்.கே.நகர் வெற்றியை விட ஜனநாயக சீரழிவுக்கான உதாரணம் வேறேதும் தேவையில்லை. பொதுவாழ்க்கைப் பண்பும், மக்கள் நலனுக்காக இயங்கும் அரசியலும் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டதற்கான ஒட்டுமொத்த அடையாளம்தான் தினகரன். இது அரசியலே அல்ல, அழிவியல்!” என்று ஷார்ப்பாக சாடியிருக்கிறார்.

இது தினகரன் தரப்பை கடுப்பேற்றுவதை விட எரிச்சலாக்கி இருக்கிறது. அவர்கள், ‘அரசியலில் ஏஜெண்ட் வேலை செய்து கொண்டிருக்கிறார் தமிழருவி மணியன். தமிழின் பெயரை சொல்லி இப்படி சம்பாதிப்பதை விட நாலு பேருக்கு தமிழ் டியூஸன் எடுத்துப் பொழைக்கலாம் அவர். வைகோ, விஜயகாந்த், வாசன் என ஒவ்வொருவராய் முடித்துவிட்டு வந்தவர் இப்போது ரஜினியின் தலையில் கை வைத்திருக்கிறார்.

ஆமை புகுந்த வீடு மட்டுமல்ல தமிழருவி புகுந்த கட்சியும் விளங்காது.” என்று ஆவேசப்பட்டு அள்ளி நொறுக்கியுள்ளனர்.

இந்த நிலையில் ‘அ.தி.மு.க. தனது கடைசி அத்தியாயத்தை எழுதி வருகிறது. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் அதிகாரம் இருக்கு வரையில் கொள்ளையடிக்கலாம் என்று செயல்பட்டு வருகிறார்கள். சுயநலனுக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கும் இவர்களை காப்பாற்றிக் கொண்டிருப்பது மோடிதான்.

மக்கள் நலன் சாரா அரசியல் செய்வதால் அ.தி.மு.க.வும், அந்த ஆட்சியை கட்டிக் காப்பாற்றுவதால் பா.ஜ.க.வும் நிச்சயம் மக்கள் கையாலேயே வீழ்த்தப்படுவார்கள்.
அதன் பின் காமராஜர் போல் ஊழலற்ற ஆட்சியை ரஜினி கொடுப்பார்.” என்று பழனிசாமி - பன்னீரையும் தாளித்திருக்கிறார் தமிழருவி.