dinakaran interviews shows his untruth over it raids thamizisai soundarrajan

எதிர்க் கட்சிகள் உண்மையாக இல்லை. எனவேதான் ஆளுநரின் மேற்பார்வைக் கூட்டத்தை விமர்சிக்கிறார்கள் என்று கூறினார் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைவாக நிறைவேற்ற உதவும் என்று கூறிய தமிழிசை, தினகரன் போலிச் துணிச்சலில் பேசுகிறார்; தங்கள் மீது தவறில்லை என்றால் வருமான வரி சோதனை குறித்து ஏன் பதற்றப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார் தமிழிசை சௌந்தர்ராஜன். 

அண்மையில் சசிகலா குடும்பத்தினரை மையமாக வைத்து நடத்தப்பட்ட சோதனைகள் பெரும் பரபரப்பைக் கிளப்பின. கோடிக்கணக்கிலான கணக்கில் வராத பணம் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், சசிகலா குடும்பத்தினரின் சொத்துகள், முறைகேடுகள், ஊழல்கள் என பலமாகப் பேசப்பட்டு வருகையில், தினகரனும் தன் பங்குக்கு, அரசியல்வாதி என்றால் கோவணம் கட்டிக் கொண்டிருப்பார்களா? காந்தியின் பேரனா என்றெல்லாம் பேசப் போக, தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஊழல்களுக்கு மையக் காரணமாக, சசிகலாவுடன் ஜெயலலிதாவும் உடந்தையாக இருந்ததுதான் காரணம் என்றெல்லாம் விமர்சனங்கள் தலை தூக்கியுள்ள நிலையில், இந்த சோதனையின்போது ஜெயலலிதா இருந்திருந்தால் அதிர்ச்சியடைந்திருப்பார் என்று வித்தியாசமான கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் பாஜக., தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். 

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சசிகலா குடும்பத்தினரின் இவ்வளவு பெரிய ஊழலை அறிந்து அதிர்ச்சியடைந்திருப்பார் என தமிழிசை சௌந்திரராஜன் கூறியதுதான் ஆச்சரியமான விஷயமாகப் போயுள்ளது.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போலியான துணிச்சலுடன் பேசி தங்களது குடும்பத்தினரின் தவறுகளை டிடிவி தினகரன் மறைக்கப் பார்க்கிறார் என்றார். மேலும், வருமானவரித்துறை சோதனை மூலமாக சசிகலா குடும்பத்தினரின் ஊழல் சாம்ராஜ்யம் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிய வந்துள்ளது. இப்போது மட்டும் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவ்வளவு பெரிய ஊழலை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்திருப்பார் என்று தமிழிசை ‘நம்பிக்கை’ தெரிவித்தார்.