மதுரையைச் சேர்ந்தவர் பிரேமலதா. கல்லூரி மாணவியான இவருக்கு ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற அழைப்பு வந்திருந்தது. 'மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு' என்கிற தலைப்பில் அக்டோபர் 1 மற்றும் 2 ம் தேதிகளில் உரை நிகழ்த்தி இருந்தார்.

ஐ.நா கூட்டத்தில் தமிழக அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவருக்கு பேச வாய்ப்பு கிடைத்ததற்கு பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவி பிரேமலதாவை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வருகின்றனர். இதனிடையையே அமமுக பொதுச்செயலர் தினகரன் அவரை வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஐ.நா.சபையின் ஜெனிவா கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியிருக்கும் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரேமலதாவுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூலித்தொழிலாளரின் மகளாகப்பிறந்து, உலக நாட்டுப் பிரதிநிதிகளின் மத்தியில் மனித உரிமை கல்வியின் அவசியம் குறித்து பேசும் அளவிற்கு பிரேமலதா உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.