dinakaran got 2 times of votes of admk

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. முதல் சுற்று முடிவில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனைவிட 2662 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை வகிக்கிறார்.

கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன் தனது செல்வாக்கை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இரட்டை இலையை மீட்டெடுத்த அதிமுகவினர், மக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு தங்களுக்குத்தான் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் போராடினர்.

அதே நேரத்தில் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின் அந்த கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்யும் முனைப்பில் திமுக இறங்கியது. இப்படியாக ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு வகையில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க போராடியதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்தும் பெற்றது.

பணப்பட்டுவாடா புகார்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளை கடந்து கடந்த 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற்றது. 77.5% வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று 19 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 வாக்குச்சாவடிகளின் பெட்டிகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன்படி பார்த்தால் 18 முழு சுற்றுக்கள், ஒரு அரை சுற்று என மொத்தம் 19 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ‘வெப் காஸ்டிங்’ மூலமும் பார்க்க முடியும். அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுவதால், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 5399 வாக்குகளை பெற்று தினகரன் முன்னிலையில் உள்ளார். ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனன் 2737வாக்குகளுடன் இரண்டாமிடத்திலும் திமுகவின் வேட்பாளர் மருது கணேஷ் 1181 வாக்குகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளார்.

ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட சுமார் 2 மடங்கு வாக்குகளை பெற்று அபாரமான முன்னிலையில் தினகரன் உள்ளார். திமுகவுக்கும் தினகரனுக்கும் இடையே பிரதான போட்டி நிலவும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில், முதல் சுற்று முடிவில் வெறும் 1181 வாக்குகளை மட்டுமே பெற்று திமுக மூன்றாமிடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.