dinakaran going to meet sasikala in bangalore priseon today

தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்ற பெற்ற பின்னர், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று, அவரது சின்னம்மா சசிகலாவை சந்தித்தார். ஆனால் பின்னர் வெளியே வந்து பேட்டி கொடுத்த தினகரன், சிறையில் சசிகலா மௌனவிரதம் இருப்பதாகவும், அவர் வரும் ஜனவரி மாத இறுதி வரை யாரிடமும் பேச மாட்டார் என்றும், தானும் எதுவும் பேசவில்லை என்றும் கூறினார். இதனால், ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை சசிகலா மௌன விரதம் இருப்பார் என்று கூறப்பட்டது. 
இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் இன்று சந்திக்கிறார். இது முழுக்க முழுக்க தனிப்பட்ட குடும்ப விவகாரங்கள் தொடர்புடைய சந்திப்பு என்று கூறப்படுகிறது. 

இந்த சந்திப்பின்போது இளவரசி குடும்பத்துடனான மோதல் குறித்து தினகரன் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இளவரசி குடும்பத்தைச் சேர்ந்த விவேக், கிருஷ்ணப்பிரியா ஆகியோர், தினகரனை மறைமுகமாக எதிர்க்கின்றனர். ஜெயலலிதா தொடர்பான வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், கிருஷ்ணப்பிரியா, தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் கிருஷ்ணப்பிரியா மீது தினகரன் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

மேலும், கிருஷ்ணப் பிரியாவை கட்டுப்படுத்தாமல் விவேக் வேடிக்கை பார்த்தார் என்று தினகரன் கோபத்தில் உள்ளாராம். அதிமுக அம்மா அணி சார்பாக கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரனுக்கான செலவுகளை விவேக் பார்த்துக் கொண்டார். ஆனால் இம்முறை நடந்த இடைத்தேர்தலில், விவேக் ஒதுங்கிக் கொண்டார். விவேக் மீதான கோபத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போது விவேக் வசம் உள்ள கணக்கு வழக்கு விவரங்கள் தினகரன் தரப்புக்கு போகலாம் என்று கூறப்படும் நிலையில்தான், சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் இன்று சந்திக்க உள்ளார். இதற்காக தினகரன் பெங்களூரு புறப்பட்டுச் சென்றுள்ளார். சசிகலாவுடனான இந்த சந்திப்பின்போது, தினகரனுக்கு எந்த மாதிரியான உத்தரவுகளை வழங்குவார் என்பது அவர்களின் சந்திப்புக்குப் பிறகு தான் தெரியும்.

இப்படி பல்வேறு பிரச்னைகளை வைத்துக் கொண்டு சசிகலாவை சந்திக்கவுள்ளார் தினகரன். கடந்த முறை சசிகலாவை சந்தித்த போதும் தினகரன் பேச்சைக் கேட்க சசிகலா தயாராக இல்லை என்று தெரிகிறது. இதனால் தான் அவர் மௌன விரதம் இருப்பதாக வெளியில் கூறப்பட்டது. தினகரன் கூறியபடி சசிகலா மௌன விரதத்தைத் தொடர்ந்தால், 
 இன்று அவர் தினகரனுக்கு சைகை மூலம்தான் உத்தரவுகளை வழங்க முடியும். அந்த சைகை உத்தரவுகளை தினகரன் எப்படி புரிந்து கொண்டு, வெளியில் சொல்லப் போகிறாரோ என்ற ஆவலில் செய்தியாளர்கள் சிறை வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.