dinakaran filed caveat petition in supreme court

அதிமுக இரு அணிகளாக செயல்பட்டபோது, தற்காலிகமாக சின்னமும் கட்சி பெயரும் முடக்கப்பட்டது. பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்தபிறகு, அவர்களுக்கே அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டது.

அதன்பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார் தினகரன். இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் தங்களுக்கு குக்கர் சின்னத்தையும் அதிமுக அம்மா என்ற பெயரையும் ஒதுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தினகரனுக்கே குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி-பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால், அவர்களுக்கு முந்தி உச்சநீதிமன்றத்தில் தினகரன் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், குக்கர் சின்னம் தங்கள் தரப்புக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனால், குக்கர் சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் தினகரனுக்கு தெரிவிக்கப்படும்.