டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்க டிடிவி தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. 

அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனின் அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரும் தலைவலியாக இருப்பது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கு. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது இருதரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க இடைக்காலத்தடை விதித்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

மேலும் தினகரன் தரப்பில் கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் தினகரனுக்கு வழங்க வேண்டுமென அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்க டிடிவி தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்புகளால் துவண்டு போயிருந்த தினகரனுக்கு இந்த தீர்ப்பு சற்று ஆறுதல் அளித்துள்ளது.