dinakaran didnt coopearte with delhi police

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத் தரகர் சுகேஷ் சந்திரா கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி டிடிவி.தினகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 நாள் போலீஸ் காவலில் சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட டிடிவி.தினகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் போதிய ஒத்துழைப்பு தரவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடத்திய விசாரணையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில் எந்தெந்த வங்கி கணக்குகளில், யார் யாருக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை தேதியுடன் சேகரித்துள்ளனர்.

இதற்கிடையில், சுகேஷ் சந்திராவிடம் நடத்திய விசாரணையில், டிடிவி.தினகரனிடம் பணத்தை பெற்று கொண்டதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், அதனை டிடிவி.தினகரன் மறுப்பதாகவும்கூறப்படுகிறது.

மேலும், கடந்த 5 நாட்களாக நடத்திய விசாரணையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு தகவல்கள் திரட்டவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் இன்று மதியம் சுகேஷ் சந்திராவை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, அவர் ஜாமீனுக்கு கோரிக்கை வைப்பார் என தெரிகிறது. இதற்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மீண்டும் அவரை, போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ரூ.2 கோடி, ரூ.1.5 கோடி என பல கோடி ஹவாலா பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.

இந்த பணம் அனைத்தையும் ஒன்று சேர்க்க மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஈடுபட்டதாகவும், அவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளதாகவும் டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். 

இந்த பணம் பரிமாற்றம் விவகாரத்தில் தமிழக அமைச்சர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களும் கைது செய்யப்படலாம் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.